பல நிறுவனங்களுக்கு இயக்குநராகச் செயல்பட்டு 7 மில்லியன் வெள்ளி கையாடல் செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
58 வயது லீ பூன் டெக், 2014ஆம் ஆண்டு KLWH என்னும் நிறுவனத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்திற்குத் தொடர்புடைய மற்ற சில நிறுவனங்களின் இயக்குநராகவும் அவர் செயல்பட்டார்.
2021ஆம் ஆண்டு நிதியைக் கையாடல் செய்ததாகச் சிங்கப்பூரான பூன்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கையாடலில் பூனுக்கு உதவி செய்ததாகச் சான் எவ் டெக் என்னும் 60 வயது ஆடவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Straitsworld Advisory என்னும் நிறுவனத்தின் இயக்குநராகச் சான் இருந்தபோது பூனுடன் பழகியுள்ளார்.
இருவரும் இணைந்து 2014ஆம் ஆண்டு முதல் சில மோசடிகளில் ஈடுபட்டு 7 மில்லியன் வெள்ளிக்கு அதிகமாகக் கையாடல் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த மே மாதம் பூன் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
சான் மீதான வழக்கு விசாரணை தொடர்கிறது.