சொத்து முகவைகள் மன்றத்தின்(CEA) கணினிகளில் இருந்து 3,000க்கும் மேற்பட்டோரின் அடையாள எண்களும் பெயர்களும் கசிந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
பொருத்தமற்ற 18 பேருக்கு அந்த தனிப்பட்ட விவரங்கள் ஜனவரி 21ஆம் தேதி தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும் தொழில்நுட்பக் கோளாறு அதற்குக் காரணம் என்றும் மன்றம் தெரிவித்து உள்ளது.
தரவுகள் கசிந்த சம்பவம் ஜனவரி 22 முற்பகல் 11.21 மணிக்குக் கண்டறியப்பட்டதாகவும் அது கூறியது.
அந்தச் சம்பவம் தொடர்பாக மன்றத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விகளை எழுப்பி இருந்தது.
கவனக்குறைவாக தரவுத் தொகுப்பை வெளிப்படுத்த தொழில்நுட்பக் கோளாறு வழிவகுத்ததாகவும் அந்தத் தொகுப்பில் 3,320 பேரின் பெயரும் அடையாள அட்டை எண்ணும் இருந்ததாகவும் மன்றம் கூறியது.
அந்த 3,320 பேரும் 2024 மார்ச் சொத்துச் சந்தை விற்பனையாளர் தேர்வு அல்லது 2024 ஏப்ரல் சொத்துச் சந்தை முகவர் தேர்வுகளுக்காகப் பதிவுசெய்தோர்.
இருப்பினும், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தொடர்பு விவரங்கள் கசியவில்லை என்று மன்றம் தெரிவித்துள்ளது.
விவரங்கள் கசிந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அது தனது விளக்கத்தில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களின் தனிப்பட்ட விவரங்களை மின்னஞ்சல் வாயிலாக தவறுதலாகப் பெற்ற 18 பேரையும் தொடர்புகொண்டதாகவும் மன்றம் கூறியது.
அந்த 18 பேரும் சொத்து முகவர்கள், முன்னாள் சொத்து முகவர்கள் மற்றும் இதற்கு முன்பு நடைபெற்ற சொத்துச் சந்தை விற்பனையாளர் தேர்வில் பங்கேற்றோர்.
“தங்களுக்குக் கிடைத்த தரவுகள் அடங்கிய மின்னஞ்சலை அவர்கள் பயன்படுத்தவில்லை; யாருக்கும் அதனை அனுப்பவில்லை. மாறாக, அந்த மின்னஞ்சலை அவர்கள் அழித்துவிட்டனர்,” என்றது மன்றம்.
கோளாறு ஏற்படுத்திய கணினி அகற்றப்பட்டு, சம்பவம் நிகழ்ந்ததற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்து உள்ளது.

