வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் யு-சேவ், சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படவிருக்கின்றன.
எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் உயரும் வேளையில் இந்தத் தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக ஜூன் 28ஆம் தேதி நிதியமைச்சு தெரிவித்தது.
2024 நிதியாண்டில் இரண்டாவது முறையாக வழங்கப்படும் இந்தக் காலாண்டுத் தள்ளுபடிகள் பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டுத் திட்டம், உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் ஆகியவற்றின் ஓர் அங்கமாக வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் உத்தரவாதத் திட்டத்துக்குக் கூடுதலாக 1.9 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டது.
குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்கள், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க இந்தத் தள்ளுபடிகள் கைகொடுக்கும் என்று அமைச்சு கூறியது.
இம்முறை ஓரறை, ஈரறைக் கழக வீடுகளில் வசிப்போர் மொத்தம் $285 வெள்ளி மதிப்பிலான யு-சேவ் தள்ளுபடிகளைப் பெறுவர்.
மூவறை, நாலறை, ஐந்தறைக் கழக வீடுகளில் வசிப்போர் முறையே 255 வெள்ளி, 225 வெள்ளி, 195 வெள்ளி மதிப்பிலான யு-சேவ் தள்ளுபடியைப் பெறுவர்.
தொடர்புடைய செய்திகள்
எக்சிகியூட்டிவ் அல்லது பலதலைமுறை வீடுகளில் வசிப்போருக்குக் குறைந்தபட்சமாக 165 வெள்ளி வழங்கப்படும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அதிகரிக்கும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்களைச் சமாளிக்க இந்தத் தள்ளுபடிகள் உதவும்.
சிட்டி எனர்ஜி, எஸ்பி குழுமம் ஆகியவை ஜூன் 28ஆம் தேதி எரிவாயு, மின்சாரக் கட்டண உயர்வு குறித்து அறிவித்தன.
சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பொறுத்தவரை, ஓரறை, ஈரறைக் கழக வீடுகளில் வசிப்போருக்கு ஒரு மாதக் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும். மற்ற வீடுகளில் வசிப்போருக்கு அரை மாதக் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும்.
யு-சேவ் தள்ளுபடிகள் குடும்பத்தினரின் எஸ்பி குழுமக் கணக்குகளிலும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் நகர மன்றங்கள் நிர்வகிக்கும் கணக்குகளிலும் நேரடியாகச் சேர்க்கப்படும். எனவே தகுதிபெறும் குடும்பத்தினர் இவற்றைப் பெற எதுவும் செய்யத் தேவையில்லை.

