தனியார் வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை: அரசாங்கம் மதிப்பாய்வு

2 mins read
6e69716c-61a5-460b-bb16-0ddb2eff63f0
மெரீன் டிரைவில் உள்ள ‘நெப்டியூன் கோர்ட்’ வீடுகள். - படம்: ஷின்மின்

தனியார் வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை நடைமுறைகளை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது.

அதன்படி நிலப் பட்டா (கூட்டுரிமை) சட்டத்தின்படி, விற்பனை செய்யப்படும் வீடுகளின் செயல்முறைகள் எளிதாக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

மரீன் பரேடில் உள்ள ‘நெப்டியூன் கோர்ட்’ வீட்டு உரிமையாளர்கள் சங்கம், இணையத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டதன் விளைவாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில் ‘நெப்டியூன் கோர்ட்’ வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனைக்கான உரிமையாளர்களின் ஒப்புதல் வரம்பு குறைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

‘பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு சட்ட அமைச்சு பதில் அளித்துள்ளது. அதில் நாட்டின் நில வளங்களை உகந்த வகையில் வரையறை செய்ய விதிமுறைகளையும் கொள்கைகளையும் அமைச்சு தொடர்ந்து மறுஆய்வு செய்கிறது என்று அமைச்சு கூறியுள்ளது.

“நகர சீரமைப்பை முன்வைத்து, நிலப் பட்டா (கூட்டுரிமை) சட்டப்படி செய்யப்படும் வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை (en bloc sale) உள்பட அனைத்து சட்டங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. வீட்டு உரிமையாளர்களின் உரிமைகளைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு முறையான பாதுகாப்பு அரண்கள் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஆய்வுகள் அமையும்,” என்று சட்ட அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 20) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக முதிர்ச்சியடைந்த வீடுகளில், ஒட்டுமொத்த விற்பனைக்குத் தேவைப்படும் பெரும்பான்மை ஒப்புதல் உச்ச வரம்பு குறைக்கப்படவேண்டும் என்று சொத்து விற்பனை நிபுணர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளனர்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனைக்குக் குறைந்தபட்சம் 80 விழுக்காடு பெரும்பான்மை ஒப்புதல் பெறவேண்டும். 10 ஆண்டுகளுக்குக் குறைந்த குடியிருப்புகளுக்கு 90 விழுக்காடு ஒப்புதல் தேவை.

இதனை வீடுகளின் ஆண்டைக் கருத்தில் கொண்டு படிப்படியாக அல்லது 10 விழுக்காடு குறைக்கவேண்டும் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

“சொத்து உரிமையாளர்கள், மேம்பாட்டாளர்கள், ஆலோசகர்கள், தொழில் அமைப்புகள், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோரிடம் நாங்கள் கருத்துகளைச் சேகரித்து வருகிறோம். அனைத்து பரிந்துரைகளும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு, சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் தயாரானதும் அறிவிக்கப்படும்,” என்று சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்