ஆசியப் பொருளியல்களின் மீள்திறனை ஆராய்ந்த கலந்துரையாடல்

ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026

ஆசியப் பொருளியல்களின் மீள்திறனை ஆராய்ந்த கலந்துரையாடல்

படம்: சுந்தர நடராஜ்

27 Nov 2026 - 6:18 pm

3 mins read

உலகளாவிய பொருளியல் நிச்சயமற்றநிலை, செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஆபத்துகள், ஆசியப் பொருளியல்களின் மீள்திறன் போன்றவற்றை ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026’ன் பொருளியல் கலந்துரையாடல் விரிவாக ஆராய்ந்தது.

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற ஐந்தாவது மாநாட்டின் ஒரு பகுதியாக இக்குழுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

‘நாம் உலகளாவிய நெருக்கடியை நோக்கிச் செல்கிறோமா? ஆசியப் பொருளியல்கள் எவ்வாறு பதிலளிக்கும்?’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கலந்துரையாடலை பிஸ்னஸ் டைம்ஸ் நாளேட்டின் மூத்த செய்தியாளர் பென் பால் வழிநடத்தினார்.

மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர், இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வெ.அனந்த நாகேஸ்வரன், ஹுத்தோங் ரிசர்ச் நிறுவனத்தின் பங்குதாரர் குவோ ஷான், எஸ்ஜிஎக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோ பூன் சாய் ஆகியோர் இதில் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் பேசிய முனைவர் அனந்த நாகேஸ்வரன், உலகப் பொருளியல் வளர்ச்சி செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.

இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வெ.அனந்த நாகேஸ்வரன் (வலமிருந்து இரண்டாமவர்) வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026’ன் பொருளியல் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வெ.அனந்த நாகேஸ்வரன் (வலமிருந்து இரண்டாமவர்) வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026’ன் பொருளியல் கலந்துரையாடலில் பங்கேற்றார். - படம்: சுந்தர நடராஜ்

“2023க்குப் பிறகு உலகப் பொருளியல் வளர்ச்சி, ‘ஏஐ’ எனும் ஒற்றைக் காரணியைச் சார்ந்தே பெருமளவில் அமைந்துள்ளது. நிதி, தொழில்நுட்ப ரீதியாக ‘ஏஐ’ குமிழி உடையும்போது ஏற்படக்கூடிய சரிவை எதிர்கொள்ள உலகம் இப்போதே தயாராக வேண்டும்,” என்று அவர் சுட்டினார்.

‘ஏஐ’ கொண்டுவரும் உற்பத்தித்திறன் வளர்ச்சி, மூலதன முதலீட்டாளர்களுக்கு மட்டுமே சென்றுசேராமல், உழைக்கும் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார் அவர். அவ்வாறு இல்லையெனில், அதனால் ஏற்படும் வேலை இழப்புகளும் சமூக அமைதியின்மையும் நிறுவனங்களின் வருவாயையும் வணிகத்தையும் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பொருளியல் குறித்துப் பேசிய அவர், அனைத்துலக ‘ஏஐ’ பங்குச்சந்தை ஏற்றத்தில் இந்தியப் பங்குகள் நேரடியாகப் பங்கெடுக்காததால், அத்துறையில் சரிவு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு இந்தியாவுக்கு இருக்காது என்றார்.

“அதேநேரம் ‘ஏஐ’ பயன்பாட்டுத் தளத்தில் இந்தியா தீவிரமாக இயங்குகிறது. சமூக, பொருளியல் வளர்ச்சிச் சவால்களுக்குத் தீர்வுகாணும் 500க்கும் மேற்பட்ட ‘ஏஐ’ பயன்பாடுகளைச் சென்னை ஐஐடி ஆவணப்படுத்தி வருகிறது,” என்று அவர் சுட்டினார்.

மேலும், எரிசக்தி, உரம், அரிய தாதுக்கள் போன்றவற்றுக்கு இந்தியா உலகச் சந்தையைச் சார்ந்திருந்தாலும் உள்ளூர் உற்பத்தியையும் உத்திசார் மீள்திறனையும் ஒருசேர வளர்த்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலுக்கு முன்னர் உரையாற்றிய மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர், நிச்சயமற்ற உலகச் சூழலிலும் மலேசியப் பொருளியல் நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 5.6 விழுக்காடு வலுவான வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். - படம்: சுந்தர நடராஜ்

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் (JS-SEZ) இதுவரை 88.83 பில்லியன் ரிங்கிட் முதலீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சிங்கப்பூரின் பங்கு 61.7 விழுக்காடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கலந்துரையாடலில் பேசிய திரு அக்மல், புவிசார் அரசியல் போட்டித்தன்மையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எந்த நாடும் நீடித்த பொருளியலை வளர்க்க முடியாது என்றார்.

மலேசியா, விநியோக நடவடிக்கைகளின் உயர்மதிப்புப் பிரிவுக்கு நகர முனைவதாகவும் தரவு நிலையங்களை அனுமதிப்பதில் நீர், மின்சக்திப் பயன்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் விழிப்புடன் தெரிவுசெய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதி பங்காளியாகவும் இணைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்