வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்கள் புதன்கிழமை (ஏப்ரல் 23) வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கட்சிக்குத் தலைமை தாங்கும் தேசிய, வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதிக்கான கட்சியின் அறிக்கையை ‘ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைவோம்’ என அறிவித்தார்.
அத்தொகுதி குடியிருப்பாளர்களுக்கு மசெக ஏராளமான திட்டங்களை வைத்துள்ளதாக அமைச்சர் லீ கூறினார்.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினம், மூத்தோருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை, வேலை தேடுவோருக்கு ஆதரவு, குடும்பங்களுக்குத் தேவையான உதவி, இளையர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஊக்குவிப்பு, உடற்குறையுள்ளோருக்கும் மனநலப் பிரச்சினை உடையோருக்கும் ஆதரவு, குடியிருப்புப் பேட்டைகளை மேம்படுத்துதல், பசுமை நிறைந்த குடியிருப்புச் சூழலை அமைத்தல் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்றார் திரு லீ.
“இத்திட்டங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வழியமைக்கும்,” என்றார் திரு லீ.
குறிப்பாக, தாமான் ஜூரோங், நன்யாங், பூன் லே ஆகிய இடங்களில் வாடகை வீடுகளில் வசிப்போருக்குக் கூடுதல் உதவி செய்துத் தரப்படும் என்று அமைச்சர் லீ கூறினார்.
2020 பொதுத் தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் லீ அவை குடியிருப்பாளர்களுக்குப் பயனளித்ததையும் சுட்டினார்.
வரும் பொதுத் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டால் தாமும் தம் குழுவினரும் மக்களுக்கு சேவை செய்யத் தயார் என்றும் குடியிருப்பாளர்களின் கவலைகள் குறித்து கொள்கைகள் வகுக்கப்படும் என்றும் அமைச்சர் லீ உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதர மசெக வேட்பாளர்கள் தாங்கள் கவனம் செலுத்தவுள்ள அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்தனர்.
தமிழ்முரசின் கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ஹமீது ரசாக், “சிங்கப்பூரில் 2030க்குள் குடிமக்களில் நால்வரில் ஒருவர் 65 வயதுக்கும் மேற்பட்டவராக இருப்பார். மூத்தோரின் ஆரோக்கியம் மிக முக்கியம். ‘நலமாக மூப்படைதல் எஸ்ஜி’ செயல்திட்டத்தை விரிவுசெய்து பல உத்திகளைக் கையாள்வோம்,” என்றார்.

