இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் பிள்ளைகளின் பெற்றோர் பிள்ளையுடன் கூடுதல் நேரம் செலவிட முடியும். ஏப்ரல் முதலாம் தேதியிலிருந்து நடப்புக்குவரும் புதிய பகிர்வு பெற்றோர் விடுப்புத் திட்டம் அதற்கு வழியமைக்கும்.
திட்டத்தின் முதற்கட்டமாக தகுதிபெறும் வேலை செய்யும் பெற்றோர் தற்போதிருக்கும் பிள்ளைபேறு விடுப்பிற்கு மேல் கூடுதலாக ஆறு வார விடுப்பைப் பெறுவர் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு (மார்ச் 27) தெரிவித்தது. பெற்றோர் அந்த ஆறு வார விடுப்பைப் பகிர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
ஏப்ரல் முதலாம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் சிங்கப்பூர்ப் பிள்ளைகளின் பெற்றோருக்கு அது பொருந்தும்.
சிங்கப்பூர்ப் பிள்ளையின் தந்தைக்கு அரசாங்கச் செலவில் வழங்கப்படும் கட்டாய தந்தையர் விடுப்பு இரண்டு வாரங்களிலிருந்து 4 வாரங்களுக்கு அதிகரிக்கிறது.
இரண்டாம் கட்டத்தில் சிங்கப்பூர்ப் பிள்ளைகளின் பெற்றோருக்கான பகிர்வு விடுப்புத் திட்டம் 10 வாரங்களுக்கு உயர்த்தப்படும். அது 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் காணும். அதன் மூலம் தற்போதிருக்கும் பெற்றோர் விடுப்பில் 50 விழுக்காடு கூடுதலான விடுப்பைப் பெற்றோர் பெறுவர்.
கடந்த ஆண்டு நவம்பரில் பிள்ளை வளர்ச்சி இணை சேமிப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
பிரதமர் லாரன்ஸ் வோங் மேம்படுத்தப்பட்ட பெற்றோர் விடுப்பு திட்டம் பற்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய தினக் கூட்டத்தில் அறிவித்தார்.
ஒட்டுமொத்தத்தில் பெற்றோர் விடுப்பில் செய்யப்பட்ட மாற்றங்களால் ஒவ்வொரு தம்பதிக்கும் முதல் பிள்ளை பிறக்கும்போது 30 வாரங்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். அதில் 16 வாரங்கள் அரசாங்க செலவில் வழங்கப்படும் தாய்மார் விடுப்பும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
பகிர்வு திட்டத்தில் வழங்கப்படும் விடுப்பை எப்படி பகிர்ந்துகொள்ளலாம் என்பதை பிள்ளையின் தாயும் தந்தையும் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு குறிப்பிட்டது.