ஜூரோங் வெஸ்ட்டில் இரண்டு பேருந்துகள் மோதிய மோசமான விபத்தில் 44 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து விசாரிக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
ஞாயிற்றுக்கிழமை காலை (டிசம்பர் 14) ஜூரோங் வெஸ்ட், அவென்யூ1, புளோக் 425க்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
காலை 11 மணிக்கு சற்று முன்பாக விபத்து குறித்து தெரிய வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அங்கு வந்த அதிகாரிகள், பேருந்து ஒன்றின் இருக்கையில் சிக்கியிருந்தவரை ஆயுதங்களைக் கொண்டு நெம்பி வெளியே கொண்டு வந்தனர்.
எஸ்பிஎஸ் நடத்தும் பேருந்துச் சேவை எண் 99ன் பின்புறத்தில் டவர் டிரான்சிட் இயக்கும் பேருந்துச் சேவை 98 மோதியதாகத் தெரிகிறது. இரண்டு பேருந்துகளும் ஈரடுக்குப் பேருந்துகளாகும். ஒன்றன்மீது ஒன்று மோதியதை சில புகைப்படங்களும் காட்டின.
காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இரண்டு பேருந்து நிறுவனங்களும் சம்பவத்தை விசாரித்து வருவதாகவும் அது சொன்னது.
“இந்த விபத்தால் பயணிகள் காயம் அடைந்ததற்கும் துயரத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஆணையம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அங்கு வந்த காவல்துறையினர், விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றி தடுப்புகளைப் போட்டனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் 12.30 மணிக்கு அங்கு சென்றபோது காயமடைந்த சில பயணிகளுக்கு அருகில் இருந்த புளோக்கில் முதலுதவி வழங்கப்பட்டதைக் கண்டனர்.
ஒரு பயணி, படுக்கையில் வைத்து அவசர வாகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
காலை 11.30 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற திருமதி காவோ, 63, மூன்று பயணிகளுக்கு கவனிப்பு வழங்கப்பட்டதை நேரில் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அவர்களில் இருவர் புல்வெளியில் படுத்துக் கிடந்தனர்.
விபத்து நிகழ்ந்தபோது அருகில் காப்பிக் கடையில் இருந்த திருமதி ரோஸி லியான், 11.00 மணியளவில் பெரும் சத்தத்தைக்கேட்டுள்ளார்.
71 வயதான அவர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் மூக்கில் ரத்தம் கசிந்தபடி ஒரு வயதான பெண்மணி மற்றும் தலையில் கட்டுப் போடப்பட்ட ஓர் ஆண் உட்பட பலரை காயத்துடன் கண்டதாகவும் கூறினார்.
பிளாக் 425ல் உள்ள தனது வீவக வீட்டிலிருந்து பெரும் சத்தம் கேட்டு அதிர்ச்சிடைந்த 72 வயதான திருமதி பே லி, சம்பவ இடத்தில் ஒரு வயதான மனிதரின் வாயிலிருந்து ரத்தம் கசிவதையும் முகங்களிலும் கால்களிலும் காயத்துடன் புல்வெளியில் அமர்ந்திருந்த நால்வர் கொண்ட ஒரு குடும்பத்தையும் பார்த்ததாகத் தெரிவித்தார்.
விபத்து பற்றிய புகைப்படம் ஒன்றில் ஒரு பேருந்தின் சன்னல் மோசமாக சேதமடைந்து கண்ணாடி உடைந்திருந்ததைக் காண முடிந்தது.
சம்பவ இடத்தில் குறைந்தது மூன்று காவல்துறை வாகனங்கள், இரண்டு அவசர உதவி வாகனங்கள், இரண்டு குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் வந்திருந்தன. பேருந்து நிறுவனமான டவர் டிரான்சிட், மதியம் 12.18 மணிக்கு வெளியிட்ட பேஸ்புக் பதிவில், பேருந்துச் சேவை 98 தொடர்பான சம்பவத்தை அறிந்திருப்பதாகத் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மருத்துவ உதவி, கவனிப்பு வழங்கப்படுவதாகக் கூறிய டவர் டிரான்சிட், இதில் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி கூறியிருந்தது.

