ஸ்கூட் விமானத்தில் பயணியின் மின்தேக்கி அதிக வெப்பமானது

1 mins read
f3a4b785-d987-4cf6-b5e4-bd23cc357609
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் விமானத்தின் கோப்புப் படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு சனிக்கிழமையன்று (நவம்பர் 22) வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் ஒரு பயணியின் மறுமின்னூட்டுச் செய்யக்கூடிய மின்தேக்கி சாதனம் (power bank ) அதிக வெப்பமானது.

யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விமானச் சிப்பந்திகள் உடனடியாகச் செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்வைத்த கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பதிலளித்த ஸ்கூட் நிறுவனம், எண் TR939 விமானத்தில் நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது.

ஹாங்காங்கை விட்டு விமானம் மாலை 5.48 மணியளவில் புறப்பட்டுள்ளது. விமானம் மேற்கொண்ட பயணத்தில் எந்த நேரத்தில் சம்பவம் நடந்தது என்பதைப் பற்றி விவரங்கள் இல்லை.

“எங்களது விமானச் சிப்பந்திகள், சம்பவத்தை முறையாக கையாண்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானம் சிங்கப்பூரில் இரவு 9.06 மணிக்குத் தடைகளின்றித் தரையிறங்கியதும் அனைத்துப் பயணிகளும் வழக்கம்போல வெளியேறினர். விமான நிலையத்தில் அவசர சேவைகள் தயார் நிலையில் இருந்தன என்று,” ஸ்கூட் விமானம் தெரிவித்துள்ளது.

பயணத்தில் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன் தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஸ்கூட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்கூட் நிறுவனத்தை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேல் விவரங்களுக்குத் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்