மலிவுக் கட்டணத்தில், தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த பயிற்சிகளை மக்கள் கழகம் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.
முதியவர்கள் போன்ற, செயற்கை நுண்ணறிவு பற்றி அதிகம் அறியாதவர்கள் அதனைப் புரிந்துகொள்ளவும், அன்றாட வாழ்வில் அத்தகைய கருவிகளைப் பயன்படுத்துவதில் நம்பிக்கையைப் பெறவும் உதவுவதே இந்த 25 குறுகிய காலப் பயிற்சிகளின் நோக்கம். புகைப்படம் எடுத்தல், புகைப்படங்களை மேம்படுத்துதல், பயணத் திட்டமிடலுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
மக்கள் கழகத்தின் வருடாந்தர சமூகக் கருத்தரங்கில், அதன் துணைத் தலைவர் எட்வின் டோங், சனிக்கிழமையன்று (அக்டோபர் 10) இந்தப் பயிற்சிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
‘உங்கள் அக்கம்பக்கத்தில் ஏஐ’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் இரண்டு முதல் மூன்று மணி நேரப் பயிற்சிகள் ஒவ்வொன்றிற்கும், 2026 நவம்பர் முதல் 2027ஆம் ஆண்டு அக்டோபர் வரை ஏழு வெள்ளியும் அதன்பிறகு பத்து வெள்ளியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆகஸ்ட் மாதம் முதல் சமூக மன்றங்களில் நடத்தப்பட்ட இப்பயிற்சிகளின் முன்னோடி வகுப்புகளில், புவாங்கோக், புக்கிட் பாத்தோக் ஈஸ்ட், கேலாங் சிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 60 குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பிற ஏஐ திட்டங்கள்
இதற்கிடையே, பயிற்சிகளுக்கும் வசதிகளுக்கும் முன்பதிவு செய்வதற்கான கழகத்தின் மின்னிலக்கத் தளமான ‘ஒன்பிஏ’யில் (onePA), ஏஐ சார்ந்த குரல் வழி உதவியாளர் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக மக்கள் கழகம் அக்டோபர் 10ஆம் தேதி அறிவித்தது.
குடியிருப்பாளர்கள் தாங்கள் தேடும் விவரங்களை ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் இந்த குரல் வழி உதவியாளரிடம் தெரிவிக்கலாம். அவர்களின் விருப்பங்கள், தற்போதைய இருப்பின் அடிப்படையில், இது பொருத்தமான நிகழ்ச்சிகளையும் வசதிகளையும் பரிந்துரைக்கும்.
இது 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கோல் நார்த் சமூக மன்றத்தில் நடமாடும் ஏஐ இயந்திர மனித உதவியாளர் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தகவல்களை வழங்குவதுடன், குடியிருப்பாளர்களின் ஆர்வங்கள், நேரத்திற்கு ஏற்றவாறு பல்வேறு செயல்பாடுகளைத் திட்டமிடவும் அவர்களுக்கு உதவும்.
“மனித உழைப்பு தேவைப்படும், நிர்வாகம் சார்ந்த பணிகளை ஏஐ மூலம் கையாள்வதே எங்கள் நோக்கம். இதன் மூலம், எங்கள் ஊழியர்களும் தொண்டூழியர்களும் உண்மையாகவே முக்கியமான விஷயங்களில், அதாவது குடியிருப்பாளர்களுடனான மனித ரீதியான பிணைப்பு, அனுதாபம், அக்கறை ஆகியவற்றை வளர்ப்பதில் கவனம் செலுத்த முடியும்,” என்றார் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங்.
