சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், டிசம்பர் 1 முதல் தெமாசெக் இந்தியா அமைப்பின் தலைவராக திரு பியூஷ் குப்தாவை நியமித்துள்ளது.
ஓர் ஆலோசகர் என்ற பொறுப்பின் பேரில், தெமாசெக்கின் இந்திய செயல்பாடுகள், உத்திபூர்வ முயற்சிகளுக்குத் தலைமை தாங்கும் திரு ரவி லம்பாவுடன் திரு குப்தா அணுக்கமாகப் பணியாற்றுவார்.
அவர் தெமாசெக் இந்தியா குழுவுடன் முதலீட்டு உத்திகள் குறித்தும், தெமாசெக் சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் அவர்களுடன் இணைந்து பணியாற்றி ஆதரவளிப்பார். அத்துடன் இந்திய அரசாங்கம் மற்றும் வர்த்தகச் சமூகங்களுடன் ஈடுபடுவதன் மூலம் திரு குப்தா, தெமாசெக் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
கெப்பல் நிறுவனத்தின் துணைத் தலைவர், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் மற்றும் மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் தலைவர் என திரு குப்தா பல பதவிகளை வகித்து வருகிறார்.
நவம்பர் 2009 முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறும் வரை டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவி வகித்தார். சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியின் மின்னிலக்க மாற்றம் மற்றும் சொத்துகளின் அடிப்படையில் வட்டார விரிவாக்கத்திற்கு திரு குப்தா பெரும் பங்களித்தார்.
நிதிச் சேவைகளில் பல்லாண்டுகளாக உருவாக்கப்பட்ட விரிவான வர்த்தக நுண்ணறிவுகளிலும் வலுவான தொடர்புகளிலும் திரு குப்தா ஆழ்ந்த அனுவம் உடையவர் என்று தெமாசெக் ஹோல்டிங்சின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு தில்ஹன் பிள்ளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) அன்று கூறினார்.
“நமது இந்தியச் சந்தையில் ரவியின் தலைமைத்துவத்தை நிறைவு செய்யும் வகையில், திரு குப்தா, உத்திபூர்வ ஆலோசனைகளை வழங்குவார். மேலும் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் எங்கள் தெமாசெக்கின் கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவுவார்,” என்று திரு பிள்ளை கூறினார்.
தமது புதிய நியமனம் குறித்து திரு குப்தா, தெமாசெக் இந்தியா குழுவுடன் பணியாற்றுவதில் பெருமைப்படுவதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“தெமாசெக் சுற்றுச்சூழல் அமைப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளதால், பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும், புதிய வாய்ப்புகளைத் தொடரவும், இந்தியாவில் தெமாசெக்கின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் தெமாசெக் இந்தியா குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார்.

