காற்றுத் தூய்மைக்கேடு அதிகரிப்பு: மோசமடையும் ஆஸ்துமா, மூச்சுத்திணறல்

காற்றுத் தூய்மைக்கேடு அதிகரிப்பு: மோசமடையும் ஆஸ்துமா, மூச்சுத்திணறல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 7:37 pm

2 mins read

காற்றில் மிதக்கும் மிக நுண்ணிய பிஎம்2.5 தூசுத்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதை அடுத்து, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற கடும் சுவாச நோய்களால் ஏற்படும் பாதிப்பும் ஏற்றம் கண்டுள்ளது.

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவை நாடுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதாக உள்ளூர் ஆய்வாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

‘டியூக்-என்யுஎஸ்’ மருத்துவப் பள்ளி, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, மயாமி பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவுகள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 28) ‘ஜேஏஎம்ஏ நெட்வொர்க் ஓபன்’ எனும் புகழ்பெற்ற மருத்துவ இதழில் வெளியாயின. அவசர சிகிச்சை மற்றும் முன்கள மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் உதவிப் பேராசிரியரும் இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான யோஹெய் ஒக்காடா இது பற்றி விளக்கினார்.

“காற்றின் தரம் குறித்த எச்சரிக்கைகளை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். நோய் அறிகுறிகள் தீவிரமடையும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், புகைமூட்டத்தில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரித்த சில நாள்களுக்குப் பிறகே உடலளவில் அதன் பாதிப்புகள் முழுமையாகத் தெரியவரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிஎம்2.5 என்பது 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டத்தைக் கொண்ட அதிநுண்ணிய தூசாகும். இது மனிதனின் ஒரு முடி இழையின் அகலத்தைவிட மிகவும் சிறியது என்பதால், சுவாசிக்கும்போது நுரையீரலின் ஆழமான பகுதிகளுக்குள் எளிதில் ஊடுருவிவிடும். சிங்கப்பூரின் காற்றுத் தரக் குறியீட்டைத் தீர்மானிக்கும் ஆறு முக்கிய மாசுக் காரணங்களில் பிஎம்2.5 முதன்மையானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்