டவுன்டௌன் ஈஸ்ட் வட்டாரத்தில் மூண்ட கைகலப்பு தொடர்பில் 37 வயது ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். சம்பவம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) நேர்ந்தது.
வாடிக்கையாளர் ஒருவர் தமது ஊழியர் ஒருவரைத் தாக்கியதாக டவுன்டௌன் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஜியூ யே பிஸ்ட்ரோ உணவு, பானக் கடை புதன்கிழமை (டிசம்பர் 10) சமூக ஊடகத்தில் பதிவிட்டது.
சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் கறுப்புச் சட்டை, அரைக்கால்சட்டை, வெள்ளைச் செருப்பு அணிந்திருந்த ஆடவர் கறுப்பு ஆடையில் இருந்த மற்றோர் ஆடவரிடம் பேசுவதைக் காண முடிகிறது.
அரைக்கால்சட்டை அணிந்திருந்த ஆடவர் மற்றோர் ஆடவரின் காலை உதைத்து அவரைக் கீழே தள்ளுவதையும் காணொளி காட்டுகிறது. மேலும் கீழே விழுந்த ஆடவரைக் அரைக்கால்சட்டை அணிந்த ஆடவர் தொடர்ந்து உதைக்கிறார்.
சம்பவம் கிட்டத்தட்ட 10.42 மணிக்கு நேர்ந்ததாகக் கூறிய ஜியூ யே பிஸ்ட்ரோ உணவு, பானக் கடை, ஊழியர் தமது பணியை வழக்கம்போல செய்துகொண்டிருந்தபோது எந்தக் காரணமும் இன்றி அரைக்கால்சட்டை அணிந்த ஆடவர் மூர்க்கத்தனமாய் நடந்துகொண்டதாகத் தெரிவித்தது.
சம்பவத்தை அடுத்து காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்ட உணவு, பானக் கடையில் தாக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகச் சொன்னது.
ரெட்டிட் சமூக ஊடகப் பக்கம் பதிவேற்றிய மற்றொரு காணொளியில் கறுப்புச் சட்டை, அரைக்கால்சட்டை, வெள்ளைச் செருப்பு அணிந்த ஆடவர் கடைத்தொகுதிக்கு வெளியில் இருந்தோரைப் பார்த்துக் கத்துவதைக் காண முடிகிறது.
ஜியூ யே பிஸ்ட்ரோ உணவு, பானக் கடையில் ஊழியரைத் தாக்கிய ஆடவரும் ரெட்டிட் பதிவேற்றிய காணொளியில் உள்ள ஆடவரும் ஒரே நபராக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

