டௌன்டவுன் வட்டாரத்தில் காவல்துறை பயிற்சி

1 mins read
27dc4288-c82a-4388-a636-f76cf347ff44
பயிற்சியின்போது வெற்றுத்தோட்டாக்கள் பயன்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டௌன்டவுன் வட்டாரத்தில் புதன்கிழமை (நவம்பர் 26) பயிற்சி நடத்த இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பயிற்சி நடைபெறும் இடத்தில் காவல்துறை அதிகாரிகள் காணப்படுவார்கள் என்று அது திங்கட்கிழமை (நவம்பர் 24) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

வெற்றுத் தோட்டாக்களைப் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளப்படும் என்றும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

பயிற்சி நடைபெறும் இடம் சுற்றி மறைக்கப்பட்டு இருக்கும். அத்துடன், பயிற்சி நடைபெறுவதைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகைகள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும்.

காவல்துறையின் பயிற்சி காரணமாக, அந்த இடத்தை புதன்கிழமை இரவு 7 மணி முதல் 10 மணி வரை தற்காலிகத் தடை வட்டாரமாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பராமரிக்கும்.

அந்தத் தடை நேரத்தில் பட்டங்களையும் பலூன்களையும் பறக்கவிடுவதோ ஆளில்லாத வானூர்தியை வானில் செலுத்துவதோ கூடாது. அதற்குத் தனியாக அனுமதி பெறவேண்டும்.

தடையை மீறி இவற்றைப் பறக்கவிடுவது குற்றமாகும். முதல்முறை அந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு $20,000 வரை அபராதம் விதிக்க முடியும். குற்றம் தொடர்ந்தால் அபராதம் இரட்டிப்பு ஆவதோடு 15 மாதம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்