அதிகரிக்கும் வேலைவாய்ப்பு விளம்பர மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

அதிகரிக்கும் வேலைவாய்ப்பு விளம்பர மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

2 mins read
e29e06b8-d746-40c5-b7f5-e306c83dc577
 கலை நிகழ்ச்சிகளில் ஊழியர்களாக இணையும்படி வரும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து அதிகாரிகள் எச்சரித்தனர். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

சிங்கப்பூரில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் ஊழியர்களாக இணையும்படி வரும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்தகைய விளம்பரங்கள் குறித்து இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து குறைந்தது 20 புகார்கள் வந்துள்ளதாகக் காவல்துறையும் கவ்டெக்கும் வெள்ளிக்கிழமை (மே 15) அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

வேலைக்கு ஆள் எடுக்கும் உண்மையான நிறுவனங்களின் பிரதிநிதிகளைப் போல தங்களைக் கட்டிக்கொள்ளும் மோசடிக்காரர்கள், டெலிகிராம், கெரூசல் போன்ற சமூக ஊடகத் தளங்களில் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களைப் பதிவேற்றுகின்றனர்.

மோசடிக்கு எதிரான நிலையமும் சிங்பாஸ் டிரஸ்ட், பாதுகாப்புக் குழுவும் இணைந்து மேற்கொண்ட முயற்சியில் மோசடி வேலைவாய்ப்பு விளம்பரம் குறித்து அம்பலமானது.

வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி தொடர்புகொள்வோரிடம் பெயர், அடையாள அட்டை எண், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை மோசடிக்காரர்கள் கேட்டுப் பெறுகின்றனர்.

அத்துடன் தனிப்பட்ட விவரப் பாதுகாப்புச் சட்ட உடன்பாட்டில் பாதிக்கப்பட்டோரிடமிருந்து கையெழுத்துப் பெறப்பட்டது.

ஒருசிலரிடம் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த உண்மையான நிறுவனங்களின் உரிம எண்களை வழங்கி மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் அதைச் சரிபார்க்கும்படியும் கூறினர்.

அதையடுத்து பாதிக்கப்பட்டோரிடம் சிங்பாஸ் கணக்கில் உள்ள அவர்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை மாற்றும்படி கூறி பின் அதை ஊடுருவினர்.

காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டோர் அறிந்துகொண்டனர்.

பொதுமக்கள் தங்கள் ரகசிய சிங்பாஸ் விவரங்களை அறிமுகம் இல்லாதோரிடம் கொடுக்கவேண்டாம் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவனத்தின் உரிம எண்ணை ஒருவர் வழங்கினால் அது உண்மையான வேலைவாய்ப்பு என்று நம்பிவிடவேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்