அதிபர் தர்மன் சண்முகரத்னம் எகிப்துக்கு நான்கு நாள் பயணம் மேற்கொள்கிறார். வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கி திங்கட்கிழமை (செப்டம்பர் 22) வரை அவர் அங்கிருப்பார்.
மத்திய கிழக்கிற்கும் வடஆப்பிரிக்காவுக்கும் அதிபர் தர்மன் மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவப் பயணம் அது.
எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார். அதிபர் தர்மனின் எகிப்தியப் பயணம் வடஆப்பிரிக்க நாட்டுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள நீண்டகால உறவை மறுஉறுதிப்படுத்துவதாக வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையில் அரசதந்திர உறவு தொடங்கி அடுத்த ஆண்டுடன் (2026) 60 ஆண்டுகள் நிறைவடையும்.
கெய்ரோவில் திரு தர்மனுக்கு அரசு மரியாதையுடன்கூடிய வரவேற்புச் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரு சிசியுடன் அதிபர் பேச்சு நடத்துவார். எகிப்திய அதிபர் அவருக்கு அரசு விருந்தளித்து கௌரவிப்பார்.
திரு தர்மன் எகிப்தியப் பிரதமர் முஸ்தஃபா மேட்போலியையும் சந்தித்து உரையாடுவார்.
தலைவர்கள் இருவரும் இணைந்து சிங்கப்பூர்-எகிப்து வர்த்தகக் கருத்தரங்கைத் தொடங்கிவைப்பர்.
சூயஸ் கால்வாய்ப் பொருளியல் வட்டாரத்திற்கும் திரு தர்மன் செல்வார். எஸ்ஜி60 கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றில் அங்கிருக்கும் சிங்கப்பூரர்களுடனும் அவர் கலந்துபேசுவார்.
தொடர்புடைய செய்திகள்
திரு தர்மனுடன் அவரின் துணைவியார் திருமதி ஜேன் இத்தோகி சண்முகரத்னம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தகவல் மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஸ்லினா அப்துல் ஹலிம், இங் ஷி சுவான் முதலியோரும் எகிப்துக்குப் பயணமாகின்றனர்.
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் டியோ சியோங் செங் தலைமையில் வர்த்தகப் பேராளர் குழுவொன்றும் அவர்களுடன் செல்கிறது.