சிங்கப்பூரும் மலேசியாவும் கடந்த 60 ஆண்டுகளில் இருதரப்பு ரீதியாகவும் வட்டார ரீதியாகவும் சாதித்தது குறித்து பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (டிசம்பர் 4) மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இரு நாடுகளும் 60 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் கொண்டாடும் மைல்கல்லைப் பாராட்டிய திரு வோங், கடந்த காலச் சந்திப்புகளில் திரு அன்வாருடனான ஈடுபாடுகளையும் நட்பையும் எப்போதும் மதிப்பதாகக் கூறினார்.
“நாங்கள் நேர்மையான, ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்த முடிகிறது. மேலும் நெருங்கிய அண்டை நாடுகள், நல்ல நண்பர்கள் மற்றும் இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்பதில் நாங்கள் இருவரும் கவனம் செலுத்துகிறோம்,” என்று ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற 12வது சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பு நிகழ்ச்சியில் திரு வோங் கூறினார்.
“சாபா மற்றும் சரவாக்கில் துணைத் தூதரகங்களைத் திறக்கும் சிங்கப்பூரின் திட்டத்திற்கு மலேசியா முறையாக ஒப்புதல் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று திரு வோங் சொன்னார்.
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளும் சுகாதார ஒத்துழைப்பு, போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டன. மேலும் ஜோகூர்-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து ரயில் இணைப்பு (ஆர்டிஎஸ்) தொடர்பான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டன.
ஆகாயவெளி, நீர் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் உள்ளிட்ட ‘நீண்டகால பிரச்சினைகள்’ இரு தரப்பினருக்கும் இடையில் உள்ளன என்று திரு வோங் குறிப்பிட்டார்.
“இந்த வட்டாரத்தில் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்தால், விமான நிலையங்கள் பாதுகாப்பாகவும் ஆற்றலுடனும் செயல்படுவதை உறுதிசெய்ய, இரு தரப்பினரின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த ஏற்பாடுகளில் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து பணியாற்றும்.
“ஜோகூர் ஆற்றின் நீரின் அளவை அதிகரிப்பதிலும், நீரின் தரத்தைப் பாதுகாப்பதிலும் பொதுவான ஆர்வம் இருக்கிறது,” என்றும் திரு வோங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நீர், ஆகாயவெளி மற்றும் கடல் எல்லைகள் போன்ற சிக்கலான பிரச்சினைகளில் இரு நாடுகளும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், “நல்ல அண்டை நாடுகளாக, நாங்கள் தொடர்ந்து நல்லெண்ணத்தில் ஈடுபடுவோம்” என்று பிரதமர் வோங் கூறினார்.
ஆகாயவெளி பிரச்சினையில், விமானப் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் கூட்டு ஆய்வை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
“நமது இரு நாடுகளின் உறவு இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து செழித்து வளர்வதை உறுதி செய்வதில் சமமான அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒரு நண்பரைக் (பிரதமர் அன்வார்) கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று திரு வோங் கூறினார்.
“நமது பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தவும், இருநாட்டு குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தவும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்,” என்றும் பிரதமர் வோங் தெரிவித்தார்.
ஓய்வுத்தளச் சந்திப்புக்கு முன்னதாக, டிசம்பர் 4ஆம் தேதி ஒரு ஃபேஸ்புக் பதிவில், மலேசியப் பிரதமர் அன்வார், இந்த வருடாந்தர சந்திப்பு இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாகும் என்று கூறினார்.
நெருங்கிய அண்டை நாடு மற்றும் ‘ஆசியான் நண்பர்’ ஆன சிங்கப்பூருடனான நெருக்கமான மற்றும் வலுவான அரசதந்திர உறவு இரு நாடுகளின் குடிமக்களுக்கும் பயனளிக்கும் என்று திரு அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

