ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார்.
மாநாட்டின்போது ஜி20 உறுப்பிய நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது சிங்கப்பூருக்கும் அந்த நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மறுஉறுதி செய்யப்பட்டதுடன் மேலும் வலுவான பங்காளித்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மாநாட்டின்போது சக தலைவர்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு ஏற்பட்டதாகத் திரு வோங் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 23) தமது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டார்.
சனிக்கிழமையன்று (நவம்பர் 22) ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டர் லெயெனை அவர் சந்தித்துப் பேசினார். ஐரோப்பிய ஒன்றியம் - ஆசியான் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
ஐரோப்பிய ஒன்றியம் - சிங்கப்பூர் மின்னிலக்க வர்த்தக உடன்பாட்டுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ ஒப்புதலைப் பிரதமர் வோங் வரவேற்றார்.
இந்த உடன்பாடு இவ்வாண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்டது.
இத்தகைய ஓர் உடன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஆசியான் நாட்டுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது இதுவே முதல்முறை.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே மின்னிலக்க வர்த்தகத்தை நடத்தவும் இருதரப்புக்கும் இடையே பாதுகாப்பான தரவுப் பரிமாற்றத்துக்கான விதிமுறைகளை அமைக்கவும் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
அயர்லாந்து பிரதமர் மைக்கல் மார்ட்டின், ஜெர்மானியப் பிரதமர் ஃபிரடெரிக் மெர்ஸ், நெதர்லாந்துப் பிரதமர் டிக் ஸ்கூஃப் ஆகியோரையும் பிரதமர் வோங் சந்தித்துப் பேசினார்.
பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனையும் திரு வோங் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவு வலுவாக இருப்பதாக அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஆசியானுக்கும் இடையே மேலும் நெருங்கிய உறவை ஏற்படுத்த இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருவதாகப் பிரதமர் வோங் தெரிவித்தார்.
இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியையும் பிரதமர் வோங் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூருக்கும் இத்தாலிக்கும் இடையே 1965ஆம் ஆண்டிலிருந்து அரசதந்திர உறவு இருந்து வருகிறது.
இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், ஆய்வு தொடர்பான உறவுகளை மேலும் வலுப்படுத்த கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று திரு வோங்கும் திருவாட்டி மெலோனியும் தெரிவித்தனர்.
திருவாட்டி மெலோனியைச் சிங்கப்பூருக்கு அழைக்க இருப்பதாகப் பிரதமர் வோங் கூறினார்.
வியட்னாமியப் பிரதமர் ஃபாம் மின் சின், துருக்கிய அதிபர் ரிசெப் தயீப் எர்துவான், சீனப் பிரதமர் லீ சியாங் ஆகியோரைச் சந்தித்ததாகப் பிரதமர் வோங் கூறினார்.
உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு விடுத்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசாவுக்குப் பிரதமர் வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஜி20 உச்சநிலை மாநாடு ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை.
“தென்னாப்பிரிக்காவின் தலைமைத்துவத்தின்கீழ், உச்சநிலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. சிங்கப்பூருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளேன்,” என்று பிரதமர் வோங், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

