கோவன் தனியார் வீடுகள் வட்டாரத்தில் அமைந்துள்ள சில வீடுகளின் பின்புறம் ஒரு நடைபாதை உள்ளது.
ஹவ்காங் அவென்யு 2க்குச் செல்லக்கூடிய அந்த 25 மீட்டர் நீளப் பாதை, ருபெய் கிரசென்டுக்கும் ஜாலான் ஆரிஃப்புக்கும் இடையே அமைந்துள்ளது.
பாதை இருக்கும் இடத்தில் உள்ள ஓர் தனியார் வீட்டின் உரிமையாளர், ‘ஐலன்ட் சார்டர்ட்’ என்ற சொத்து மேம்பாட்டாளரின் பெயரில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் அந்த நடைபாதையை இரும்பு நுழைவாயிலைக் கொண்டு அடைத்துள்ளார்.
அந்த சிறு நடைபாதையை அங்குள்ள பல குடியிருப்பாளர்கள் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதைக்கொண்டு ஹவ்காங் அவென்யு 2ல் உள்ள பேருந்து நிலையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு அருகே உள்ள வசதிகள் என பலவற்றையும் அடைய அது உதவியாக இருந்துள்ளது.
பேரப்பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல முதியோர்களும், வேலைக்குச் செல்லும் குடியிருப்பாளர்களும் வீட்டுப் பணிப்பெண்கள் சந்தைக்குச் செல்லவும் அப்பாதையே சிறந்த வழியாக இருந்தது.
ஆனால் அக்டோபர் 28ஆம் தேதி ‘தனியார் சொத்து’ என்ற ஒரு அறிவிப்பு அந்த நடைபாதையின் புது நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்ததைக் குடியிருப்பாளர்கள் கண்டனர். பாதையின் இரு நுழைவுகளிலும் அது இருந்தது.
‘ஐலன்ட் சார்டட்’ என்ற நில மேம்பாட்டாளரின் பெயரில் அந்தப் பாதையின் நிலப்பட்டா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பாதையின் அருகில் உள்ள சில வீடுகள் அந்த மேம்பாட்டாளரின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளன.
பாதை அடைக்கப்பட்டதால் குடியிருப்பாளர்கள் வெகு தூரம் மாற்று வழிகளில் செல்லவேண்டியுள்ளது. அதனால் வருத்தமடைந்துள்ள அவர்கள் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் டியோங்கை அணுகியுள்ளனர். அதன்வழி அரசாங்கத்தின் உதவியை அவர்கள் பெற்று மூடிய பாதையை மீண்டும் திறக்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

