பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடொன்றில் வசிக்கும் பெண் ஒருவர், கடந்த ஆறு மாதங்களாக இரவு நேரங்களில் உரக்கப் பாடியும் கூச்சலிட்டும் வருவதால் குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புளோக் 232சி சுமாங் லேனில் ஒன்பதாம் தளத்தில் இருக்கும் அந்த வீட்டில் தினமும் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் அப்பெண் சத்தம் போடுவதாக ஷின் மின் நாளிதழிடம் அப்பகுதியில் வசிக்கும் 48 வயது சிகையலங்கார நிபுணர் லூ தெரிவித்தார்.
தாம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த மூன்று முறை காவல்துறையினர் வந்ததாகவும் அப்போது அப்பெண் வீட்டின் கதவைத் திறக்கவில்லை எனவும் அவர் சொன்னார்.
காவல்துறை வரும்போது சத்தத்தை நிறுத்தும் அப்பெண், பின்னர் மீண்டும் தொடர்வதாகவும் சன்னல் வழியே அடையாளம் தெரியாத திரவத்தைத் தெளிப்பதாகவும் திரு லூ கூறினார். இது தொடர்பான காணொளியையும் ஷின் மின் செய்தியாளரிடம் அவர் காட்டினார்.
அப்பெண் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை கூச்சலிடுவதாகவும் புளோக்கின் இரண்டாம் தளத்தில் வசிப்போரும் இதனால் பாதிக்கப்படுவதாகவும் அண்டைவீட்டார் தெரிவித்தனர்.
கூச்சலிட்டு குடியிருப்பாளர்களின் நிம்மதியைக் குலைக்கும் பெண் தொடர்பான புகார் குறித்து வீவகவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொங்கோல் நகர மன்றம் தெரிவித்துள்ளது.
உரிய அமைப்புகளுடன் இணைந்து வீவக இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.
