போதையர் மறுவாழ்வு இல்லம் விரிவாக்கத்துக்கு நிதி திரட்டு

2 mins read
0e849d29-f43a-4f66-910f-efda0d79e28a
‘பிரேக்துரூ மிஷன்ஸ்’ இல்லத்தில் உள்ள ஓர் அறை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

முன்னாள் போதைப் புழங்கிகளுக்கான போதையர் மறுவாழ்வு இல்லம் ஒன்று, 170 பேர் வரை தங்குவதற்கு இடவசதியை அதிகரிக்கவுள்ளது.

1983ல் அமைக்கப்பட்டது ‘பிரேக்துரூ மிஷன்ஸ்’ இல்லம். சாங்கியின் கோஸ்ஃபர்ட் சாலையில் உள்ள அதன் 3 ஹெக்டர் வளாகத்தில் தற்போது 71 இல்லவாசிகள், ஊழியர்கள், உதவியாளர்கள் ஆகியோர் தங்கியுள்ளனர். 2023 ஜூலையில் அந்த இல்லம் சாங்கி வளாகத்திற்கு மாறியிருந்தது. வளாகத்தில் தங்காத மேலும் 19 ஊழியர்கள் அந்த இல்லத்தில் பணியாற்றுகின்றனர்.

அந்த வளாகத்தினுள் இரண்டு ஒரு மாடிக் கட்டடங்களைக் கட்டுவதற்கு அந்த இல்லம் நிதி திரட்டி வருகிறது. 2026 ஜூலைக்குள் நிறைவுறும் இந்தக் கட்டுமானத் திட்டத்துக்கு ஏறக்குறைய $5 மில்லியன் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்சார் பயிற்சி, மறுஒருங்கிணைப்பு ஆதரவு போன்ற அம்சங்களை உள்ளடக்கும் 18 மாதத் திட்டத்தை இல்லவாசிகள் மேற்கொள்கின்றனர். பைபிள் வகுப்புகளிலும் பங்கேற்கும் அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

திட்டத்தை நிறைவு செய்ததும் இல்லத்தில் தொடர்ந்து தங்கி உதவியாளர்களாவதற்கு அவர்கள் தேர்வு செய்யலாம். இல்லத்தில் தொடர்ந்து தங்கி அங்கு பணியாற்ற விரும்புவோர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முழுநேர ஊழியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

விரிவாக்க வசதிகளில் ஒன்றான மத்திய சமையல் கூடத்தில் அன்றாடம் 170 பேருக்கு மூன்று வேளை உணவு சமைக்க முடியும். மேலும், 50 முதல் 70 வாகனங்களுக்கான கார்நிறுத்துமிடம் கட்டுவதற்கான திட்டமும் உள்ளது.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளுக்காக நிதி திரட்ட ஜூலை 18ஆம் தேதி ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றை பிரேக்துரூ மிஷன்ஸ் ஏற்று நடத்தவுள்ளது.

கல்வி அமைச்சரும் சமுதாய சேவை ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ அதில் கலந்துகொள்ள உள்ளார்.

நன்கொடை அளிக்க விரும்புவோர் https://www.breakthroughmissions.org.sg/charityevent/ எனும் பிரேக்துரூ மிஷன்ஸ் இல்லத்தின் இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.

குறிப்புச் சொற்கள்