‘கோல்ஸ் ஃபார் குட்’ நிகழ்ச்சி மூலம் அறப்பணிகளுக்காக $150,000 நிதித் திரட்டு

‘கோல்ஸ் ஃபார் குட்’ நிகழ்ச்சி மூலம் அறப்பணிகளுக்காக $150,000 நிதித் திரட்டு

படம்: வெக்டர் கிரீன்

28 Nov 2026 - 7:08 pm

2 mins read

ஆக்டிவ் எஸ்ஜி பொங்கோல் விளையாட்டு நிலையத்தில் சனிக்கிழமை (நவம்பர் 28) நடைபெற்ற ‘கோல்ஸ் ஃபார் குட்’ (Goals for Good) நிறுவன அறப்பணிக் காற்பந்துப் போட்டியில் கிட்டத்தட்ட 150,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆறு மாடிகளைக் கொண்ட அவ்வளாகம் நவம்பர் 22ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட பிறகு, அங்கு நடைபெறும் முதல் நிறுவன நிகழ்வு இது.

சமூகத்திற்குப் பங்களிக்கச் சிங்கப்பூர் முழுவதும் உள்ள வர்த்தகங்களுடன் இணைந்து செயல்படும் தேசியத் தொண்டூழிய, கொடை ஊக்குவிப்பு நிலையத்தின் ‘கம்பெனி ஆஃப் குட்’ (Company of Good) இயக்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி அந்த ‘கோல்ஸ் ஃபார் குட்’ நிகழ்வு நடைபெற்றது.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மைப் பொறியியல் நிறுவனமான ‘வெக்டர் கிரீன்’ அதற்கு ஏற்பாடு செய்தது.

அதில் 20 நிறுவனங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற போட்டியும் அலெக்சாண்டர் டூரிக், லயனல் லூயிஸ், குஸ்டா குஸாரிஷா உள்ளிட்ட முன்னாள் அனைத்துலக ஆட்டக்காரர்கள் விளையாடிய ஆட்டமும் இடம்பெற்றன. அவற்றின் மூலம் திரட்டப்பட்ட நிதி ‘ஸ்போர்ட்கேர்ஸ்’ (SportCares), சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம்(Samaritans of Singapore), ‘ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் சிங்கப்பூர்’ (Special Olympics Singapore) ஆகிய அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

“வெக்டர் கிரீனின் நிறுவன நோக்கம் ‘நன்மைக்கான புத்தாக்கம்’ என்பதாகும். தேசியத் தொண்டூழிய, கொடை ஊக்குவிப்பு நிலையத்தின் ‘கம்பெனி ஆஃப் குட்’ இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக, பன்னாட்டு நிறுவனங்களாக இருந்தாலும் சரி, சிறிய, நடுத்தர நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அவை சிறப்பாகச் செயல்படுவதுடன் சமூகத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” எனச் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும் கேலாங் இன்டர்நேஷனல் அணியின் முன்னாள் தலைவரும் வெக்டர் கிரீன் நிர்வாக இயக்குநருமான பென் டெங் கூறினார்.

இந்த நற்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் giving.sg எனும் இணையதளத்திற்குச் செல்லலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்