சிறு வயதில் தாம் கைவிடப்பட்டதாக நினைத்த சங்கர் மனோகரன் தவறானவர்களை நண்பர்களாகக் கொண்டு, பதின்ம வயதுகளில் வழிதவறிச் சென்றார். இதனால் அவர் சட்ட சிக்கல்களுக்கு உள்ளானார்.
பின்னர், அறிவுச்சுடரால் வாழ்வில் இருள் களைந்து தெளிவுடன் வாழத் தொடங்கினார் சங்கர்.
தற்போது 47 வயதாகும் திரு சங்கருக்கு அழகான குடும்பமும் சமூக அங்கீகாரமும் உண்டு. கணினித்துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பும் மனோவியலில் முனைவர்ப் பட்டமும் பெற்று, தன்னைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.
‘செண்டர் ஃபோர் சைக்கோதெரப்பி’ என்ற நிலையத்தில் தொண்டூழியம் ஆற்றி வழிதவறிய இளையர்களுடன் செயலாற்றுகிறார்.
“குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்போது எனக்காகப் பேசியபோது, அவர்களை என் ரத்த பந்தமாகக் கருதினேன். முதிர்ச்சியற்ற அந்த உணர்வு என்னை அடிதடிகளிலும் வம்பு தும்புகளிலும் ஈடுபட வைத்தது,” என்று திரு சங்கர் கூறினார்.
“இளம் வயதில் என்ன நினைக்கிறேனோ அதுவே சரியானதாகவும் முக்கியமானதாகவும் இருந்தது. அதை அப்பட்டமான சுயநலம் என்றே சொல்வேன். பெற்றோர், பெரியவர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதியாதிருந்தேன்,” என்றார் அவர்.
திரு சங்கர் 30 வயதாக இருந்தபோது அவரது தந்தை புற்றுநோயால் உயிர்நீத்தார். தாயாரும் சகோதரியும் மட்டுமே இருந்தநிலையில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவருக்கு ஏற்பட்டது.
வேலையில் சேர்ந்து அதில் முன்னேற்றம் காண்பது முதற்படியாக இருந்தது. உபசரிப்புத் துறையில் இருந்த அவர், திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்று கணினித் தொழில்நுட்பராக ஆனார். பின்னர் அத்துறையில் நிர்வாகியாக உயர்ந்தார்.
கொவிட்-19 தொற்றுக் காலத்தில் உபசரிப்புத் துறைக்குப் பாதிப்பு ஏற்பட்டபோதும் முன்னைய பழக்கங்களுக்குத் திரும்பப்போவதில்லை என்ற உறுதியுடன் இருந்தார்.
“அறிவுமுதிர்ச்சி என்பது வயதால் மட்டும் ஏற்படுவதில்லை. எனக்குத் தெரிந்த, என் வயதை ஒத்த சிலர், சிறிதும் மாறாமல் கடந்த காலத்திலேயே இருக்கின்றனர். அத்தகையவர்களிடம் இருந்து விலகிவிட்டேன்,” என்றார் திரு சங்கர்.
வாழ்க்கையில் தனக்குத்தானே ஆகச் சிறந்த நண்பர் என்பதை உணர்ந்ததாகவும் இறைவனும் மனைவி கிறிஸ்டீனும் துணைநிற்பதை எண்ணி நிம்மதி அடைவதாகவும் அவர் கூறினார்.
மனத்தில் பதிந்த காயங்களும் வடுக்களும் புதிய தவறுகளைச் செய்யத் தூண்டும் என்று குறிப்பிட்ட திரு சங்கர், மனநல ஆலோசனை வழி அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.
ஒருகட்டத்தில் தடுமாற்றமாக இருந்த தமது திருமண வாழ்க்கையைக் காப்பாற்றியது இத்தகைய ஆலோசனைகள் என்பதை அவர் சுட்டினார்.
விழிப்புணர்வு, புரிந்துணர்வு, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துதல் ஆகிய பண்புகளையும் வளர்த்து, நடக்கின்ற நல்லவற்றுக்காக இறைவனிடம் நன்றியுணர்வுடன் இருப்பதாகக் கூறினார்.
“தீபாவளியன்று அகத்தில் சுடரேற்றி ஆண்டு முழுவதும் அதனை அணையாமல் பார்த்துக்கொண்டோமானால் இந்தப் பண்டிகை அனைவர்க்கும் அர்த்தமுள்ளதாக இருக்கும்,” என்றார் திரு சங்கர்.

