மறுவிற்பனை கொண்டோமினிய வீட்டு விலை புதிய உச்சம்

மறுவிற்பனை கொண்டோமினிய வீட்டு விலை புதிய உச்சம்

கோப்புப் படம்: சாவ்பாவ்நெந்

26 Nov 2026 - 8:36 pm

2 mins read

சிங்கப்பூரில் மறுவிற்பனை கொண்டோமினிய வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் புதிய உச்சத்தைத் தொட்டது.

விற்பனையான மறுவிற்பனை கொண்டோமினிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்தபோதும் இந்நிலை உருவானது.

அக்டோபரில் கிட்டத்தட்ட 987 மறுவிற்பனை கொண்டோமினிய வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 5.9 விழுக்காடும் மாத அடிப்படையில் 9.1 விழுக்காடும் குறைவாகும்.

புதிதாக விற்பனைக்கு வந்த கொண்டோமினியத் திட்டங்களினால் ஏற்பட்ட போட்டி, மறுவிற்பனை வீட்டு விற்பனை குறைந்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று ஏ‌ஷியாஒன் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வட்டாரங்களில் பரிவர்த்தனைகள்

மறுவிற்பனை கொண்டோமினியப் பரிவர்த்தனைகளில் 51.3 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகள் மத்தியப் பகுதிக்கு அப்பாற்பட்ட வட்டாரங்களில் (ஓசிஆர்) இடம்பெற்றவையாகும். 31.8 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகள் மத்தியப் பகுதியின் எஞ்சிய வட்டாரங்களில் (ஆர்சிஆர்) இடம்பெற்றவையாகும். முக்கிய மத்தியப் பகுதியில் (சிசிஆர்) 16.9 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றன.

மறுவிற்பனை கொண்டோமினிய வீட்டுச் சந்தையில் 2.6 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகள் ஒரு வீடமைப்புத் திட்டம் நிறைவடைவதற்கு முன்னரே விற்கப்பட்ட வீடுகளுடையதாகும். இவ்விகிதம், செப்டம்பர் மாதம் பதிவான 3.8 விழுக்காட்டைவிடக் குறைவாகும்.

விற்பனைப் பரிவர்த்தனைகள் குறைந்தாலும்கூட அக்டோபரில் மறுவிற்பனை கொண்டோமினிய வீடுகளின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

எஸ்ஆர்எக்ஸ் குறியீடு

மறுவிற்பனை கொண்டோமினிய வீடுகளுக்கான எஸ்ஆர்எக்ஸ் விலைக் குறியீடு மாத அடிப்படையில் 1.3 விழுக்காடு கூடியது, ஆண்டு அடிப்படையில் 3.8 விழுக்காடு அதிகரித்தது.

செப்டம்பரில் மாத அடிப்படையில் குறியீடு 0.7 விழுக்காடு கூடியது. அந்த மாதம் ஆண்டு அடிப்படையில் குறியீடு 3.5 விழுக்காடு அதிகரித்தது.

மூன்று விற்பனை வட்டாரங்களிலும் மறுவிற்பனை கொண்டோமினிய விலை அதிகரித்தது. ஓசிஆர் வட்டாரங்களில்தான் விலை மாத அடிப்படையில் ஆக அதிகமாக 3.6 விழுக்காடு கூடியது.

சிசிஆர் வட்டாரங்களில் ஆண்டு அடிப்படையில் விலை உயர்வு ஆக அதிகமாகப் பதிவானது. அவற்றில் உள்ள மறுவிற்பனை கொண்டோமினிய விலை சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பதிவானதைவிட 4.3 விழுக்காடு கூடியது.

பரிவர்த்தனைகள் குறைந்தாலும் வீட்டு விலை குறையும் என்று சொல்ல முடியாது என்பதை இந்தப் போக்கு எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தனியார் வீடுவிற்பனைதனியார்வர்த்தகம்வீடுவிலை