சிங்கப்பூர் சொத்துச் சந்தையின் மறுவிற்பனை வீடுகளின் விலை அடுத்த ஆண்டிலிருந்து மிதமான வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
புதிய வீடுகள் சந்தைக்கு வருவதாலும் வீடுகளுக்கான தேவை குறைவதாலும் அந்த நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துச் சந்தை இவ்வாண்டு மெதுவடைந்ததை அடுத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீட்டு விலை ஒன்றிலிருந்து ஐந்து விழுக்காடு வரை உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மறுவிற்பனை வீட்டு விலை 2.9 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு அது கணிசமாக 9.7 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. 2023ல் 4.9 விழுக்காடு அதிகரித்த வீட்டு விலை பின்னர் மளமளவென கூடியது.
மில்லியன் வெள்ளிக்கு விலைபோகும் வீடுகளின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி காணும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் விலைகள் 0.4 விழுக்காடு அதிகரித்தன. கடந்த ஐந்தாண்டுகளில் இதுவே ஆக மெதுவான வளர்ச்சி. இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அத்தகைய வீட்டு விலைகள் 2.9 விழுக்காடு அதிகரித்தன.
தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் பிடிஓ வீடுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்தது. இவ்வாண்டு விற்பனைக்கு வந்த மூன்று பிடிஓ திட்டங்களிலும் எஞ்சிய வீட்டு விற்பனைத் திட்டங்களிலும் 30,000க்கும் அதிகமான வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
கடந்த மூவாண்டுகளில் இல்லாத அளவில் அவற்றுக்கு ஏறக்குறைய 100,000 பேர் விண்ணப்பம் செய்தனர். 2023ஆம் ஆண்டு அத்தகைய வீடுகளுக்கு 80,000 பேரும் கடந்த ஆண்டு 82,000 பேரும் பிடிஓ வீடுகளுக்கு விண்ணப்பம் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
2021ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டுவரை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 102,433 பிடிஓ வீடுகளை அறிமுகம் செய்தது. அதாவது சராசரியாக ஆண்டுக்கு 20,487 வீடுகள்.
அவற்றுள் இவ்வாண்டு விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளில் கிட்டத்தட்ட 28 விழுக்காட்டு வீடுகளுக்கான காத்திருக்கும் நேரம் மூவாண்டு அல்லது அதற்கும் குறைவு.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பிடிஓ வீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தபோது மறுவிற்பனை வீடுகளின் விலைகள் 2013ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தணிந்தன.
இத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மறுவிற்பனை வீட்டு விலை இவ்வாண்டு மூன்றிலிருந்து 4.5 விழுக்காடு இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

