லென்டோர் குடியிருப்புப் பேட்டையிலுள்ள ஃபுடு நடைப் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘அவர் ரெசிடன்ஸ் ஹப்’ என்ற நடுவம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1ஆம் தேதி) திறந்துவைக்கப்பட்டது.
இதன் மூலம் அங்கு வசிப்போர் சமூக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு வசதியான இடம் கிடைத்துள்ளது.
சிங்கப்பூரின் பல இடங்களில் குடியிருப்பாளர்களின் சமூக நடவடிக்கைகளுக்காக அமைக்கப்படும் இடங்களில் இது ஆகக் கடைசியானது. இந்த இடம் கொள்கல வடிவில் 30 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
இது லென்டோர் குடியிருப்பாளர் வட்டம், Lentor Health Active Ageing Centre (AAC) எனப்படும் லென்டோர் துடிப்புடன் மூப்படையும் சுகாதார மையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பங்காளித்துவ ஒத்துழைப்பின் மூலம் அந்தத் தனியார் குடியிருப்புப் பேட்டையில் வசிக்கும் முதியோர் மேலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தார் ஒரே குடும்பமாக மாறுகின்றனர் என்ற கருப்பொருளுடன் இயோ சூ காங் 2024ஆம் ஆண்டு தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த நடுவம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங்குடன் 500 குடியிருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்த திரு யிப், 2030ஆம் ஆண்டில் நான்கில் ஒரு சிங்கப்பூரர் 65, அதற்கும் அதிகமான வயதுடையவராக இருப்பார் என்று கூறினார்.
“இயோ சூ காங் பேட்டையில் 40 விழுக்காட்டினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். வீடமைப்பு வளர்ச்சிக் கழுக, கொண்டோமினிய வீட்டு குடியிருப்புகளைப் போல் அல்லாது தனியார் தரைவீட்டுக் குடியிருப்புகளில் துடிப்புடன் மூப்படைய உதவும் மையங்களுக்கு தேவையான இடம் இருப்பதில்லை,” என்று விளக்கினார்.
மேலும், லென்டோர் குடியிருப்புப் பேட்டையில் 1,024 தரைவீடுகள் இருப்பதாகவும் இதில் வசிக்கும் 30 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று திரு யிப் சொன்னார்.


