சிங்கப்பூர் சில்லறை விற்பனைத் துறை ஆண்டு அடிப்படையில் அக்டோபர் மாதம் 4.5 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. இது முந்தைய மாதத்தைவிட வேகமாக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான தொழில்கள் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதத்தில் சில்லறை விற்பனைத் துறை ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 2.7 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. இது 2.8 விழுக்காட்டு உயர்விலிருந்து திருத்தப்பட்டது.
மோட்டார் வாகனங்கள் நீங்கலாக, அக்டோபர் மாதத்தில் சில்லறை விற்பனை 3.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இது செப்டம்பர் மாதத்தில் திருத்தப்பட்ட 1.8 விழுக்காட்டு விரிவாக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது.
பருவத்துக்கேற்ப சரிசெய்யப்பட்ட, மாதத்திற்கு மாதம் என்ற அடிப்படையில், சில்லறை விற்பனை, முந்தைய மாதத்தில் திருத்தப்பட்ட 1.7 விழுக்காடு சரிவுடன் ஒப்பிடும்போது, அக்டோபரில் 2.3 விழுக்காடு உயர்ந்தது.
மோட்டார் வாகனங்கள் நீங்கலாக, சில்லறை விற்பனை மாதந்தோறும் 2.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. இது செப்டம்பரில் 2.6 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரின் சில்லறை விற்பனை 2025ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரகாசமான முன்னேற்றத்துடன் தொடங்கியது. இது தொடர்ச்சியான எட்டாவது மாத விரிவாக்கத்தைக் குறிக்கிறது என்று டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளியல் நிபுணர் சுவா ஹான் டெங் கூறினார்.
14 முக்கிய சில்லறை விற்பனை வகைகளில் பத்து, அக்டோபர் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதில், 14.5 விழுக்காடு இணைய சில்லறை விற்பனையிலிருந்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது செப்டம்பரில் பதிவு செய்யப்பட்ட 15 விழுக்காட்டை விடக் குறைவு. மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து, மொத்த சில்லறை விற்பனை மதிப்பு சுமார் $3.8 பில்லியனாக இருந்தது. அதில் 16.8 விழுக்காடு இணைய சில்லறை விற்பனையிலிருந்து வந்தது.
கணினி மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் மொத்த விற்பனையில் இணைய சில்லறை விற்பனை 52 விழுக்காடாகவும், அறைகலன்கள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கு 36.6 விழுக்காடாகவும், பேரங்காடிகள், பெரிய அளவிலான சில்லறை விற்பனைத் தொழில்களின் மொத்த விற்பனையில் 12.5 விழுக்காடாகவும் உள்ளது.

