சன்டெக் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட்டின் (Reit) எஞ்சிய பங்குகளை வாங்க குறைவான விலை தர தொழிலதிபர் கோர்டன் டாங்கும் அவரது மனைவியும் வெளியிட்டுள்ள அறிவிப்பை அதன் பங்குதாரர்கள் நிராகரிக்குமாறு ஆர்எச்பி (RHB) கேட்டுக்கொண்டு உள்ளது.
சொத்துச் சந்தைத் தொழிலதிபரான கோர்டன் டாங்கும் அவரது மனைவி செலினும் வியாழக்கிழமை (டிசம்பர் 5) சன்டெக் ரீட்டின் (Reit) பங்கு ஒன்றை $1.16 என்ற விகிதத்தில் ரொக்க விற்பனையில் வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்து இருந்தனர். டிசம்பர் 4ஆம் தேதி பங்கு வர்த்தக முடிவின் விலை அது.
ஏலியோஸ் (Aelios) என்னும் தங்களது முதலீட்டு நிறுவனம் வாயிலாக அவர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். சன்டெக் ரீட்டின் மூன்றில் ஒரு பகுதி பங்குகளை ஏற்கெனவே அந்த நிறுவனம் வைத்துள்ளது.
ஆனால், சன்டெக் ரீட்டின் நிகர சொத்து மதிப்பு, பங்கு ஒன்றுக்கு $2.07 என்று இருக்கையில், அதில் இருந்து 44 விழுக்காடு தள்ளுபடியில் விலை கொடுக்க முன்வந்து இருப்பதாகவும் அது மிகவும் குறைவான மதிப்பு என்றும் ஆர்எச்பி தெரிவித்து உள்ளது.
மேலும், சொத்துச் சந்தை ஆராய்ச்சி மன்றத்தின் இலக்கு விலையான $1.35க்கும் அந்த விலை குறைவு.
அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விலை தற்போதைய நிலவரத்தின் அடிப்படையிலேயே பங்கு விலையை நிர்ணயிக்கும்.
ஆனால், அமெரிக்க மத்திய வங்கி அடுத்த ஆண்டு வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் சன்டெக் ரீட் அப்போதைய மதிப்பீட்டின்படி நல்ல பலனைச் சந்திக்கும் என்று ஆர்எச்பி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.