அதிகரிக்கும் பதற்றம், நிச்சயமற்ற கொள்கை அடுத்த திருப்புமுனையைக் குறிக்கலாம்: மூத்த அமைச்சர் லீ

2 mins read
31f7fb07-4c72-49c5-b105-355eba17899e
சன்டெக் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் கடல்துறை தொடக்க நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

அதிகரித்துவரும் உத்திபூர்வ பதற்றத்துக்கும் நிச்சயமற்ற கொள்கைக்கும் இடையே அனைத்துலக வணிகம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஈடுகொடுத்து வளரும் என்று நினைத்துவிட முடியாது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

வணிகத்துக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் சரியும்போது கடுமையான பொருளியல், உத்திபூர்வ பாதிப்புகள் ஏற்படும் என்றும் பல நாடுகளின் பொருளியல் வளர்ச்சியை அது மட்டுப்படுத்தும் என்றும் திரு லீ சொன்னார்.

சிங்கப்பூர் கடல்துறை வாரத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற விரிவுரையில் மூத்த அமைச்சர் லீ பேசினார்.

பொருளியல் பாதிப்புகள் ஏற்பட்டால் இரண்டாம் உலகப் போருக்குப் பின் கண்டிராத புதிய சகாப்தத்தை உலகம் சந்திக்க நேரிடும் என்ற அவர், தற்போதைய தருணம் அடுத்த திருப்புமுனையாக அமையலாம் என்றார்.

எதிர்காலத்தில் எப்படிப்பட்ட நிச்சயமற்ற சூழலோ கலக்கமோ ஏற்பட்டாலும் உலக வணிகம் தொடர்ந்து வளரும் என்பது சிங்கப்பூரின் நம்பிக்கை என்றார் மூத்த அமைச்சர் லீ.

சிங்கப்பூரின் பணி அனைத்துலக வணிகத்தைப் பெருக்குவதற்கான அதன் பங்கைச் செய்வதோடு அதன் பொருளியலையும் கடல்துறையையும் இன்னும் செயல்திறன்மிக்கதாக, போட்டித்தன்மையுள்ளதாக, நம்பிக்கைக்குரியதாக மாற்றவேண்டும் என்று திரு லீ அறிவுறுத்தினார்.

அப்போதுதான் உலகம் எந்த நிலையில் இருந்தாலும் சிங்கப்பூரில் தொடர்ந்து தொழில், வணிகம் செய்வதில் மற்றவர்கள் விருப்பம் காட்டுவர் என்றார் அவர்.

கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர்ப் பொருளியல் உலகமயமாதல் சூழலில் முன்னேறியுள்ளது. உலகச் சூழல் அமைதியாகவும் நிலைத்தன்மையுடனும் இருந்தது. அமெரிக்காவால் எழுதப்பட்ட அனைத்துலக ஒழுங்கை ஆசியாவும் ஐரோப்பாவும் ஆதரித்தன.

அத்தகைய சமயத்தில்தான் ஐக்கிய நாட்டு நிறுவனம் போன்ற பன்னாட்டு அமைப்புகள் நிறுவப்பட்டன. அனைத்துலகச் சட்டங்களும் ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைக்குப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அனைத்துலக வணிகம் செழித்தோங்கியபோது அனைத்துலக கடல்துறையும் வளர்ந்தது என்று திரு லீ சுட்டினார்.

“சிங்கப்பூர் அதைப் பயன்படுத்தி முதலீடுகளைச் செய்து கொள்கைகளை அறிமுகம் செய்தது.

“ஆனால், இன்றைய உலகம் மாறுபட்டது. வணிகம் தொடர்பான நாடுகளின் மனநிலை மாறியிருக்கிறது. புவிசார் அரசியல் வளர்ச்சிகள் அனைத்துலக வணிகக் கட்டமைப்பை மாசுபடுத்திவிட்டன.

“கடந்த பத்தாண்டுகளில் வல்லரசுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதால் நாடுகளுக்கு இடையே போட்டித்தன்மை கூடிவிட்டது.

“ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை வைப்பது, ஒத்துழைப்பு ஆகியவற்றுக்குப் பதிலாகத் தன்னையே பாதுகாத்துகொள்வது, மீள்திறன், தன்னைப்பேணித்தனம் ஆகியவற்றை அவை முன்னிலைப்படுத்துகின்றன,” என்று திரு லீ சொன்னார்.

பருவநிலை மாற்றம், கடுமையான வானிலை நிகழ்வுகள் ஏற்கெனவே நிலையான வணிகப் பாதைகளைப் பாதித்துள்ளது.

சிங்கப்பூருக்கு வணிகம் முதன்மையானது என்ற மூத்த அமைச்சர் லீ, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்குக் கடல்துறை வணிகம் முக்கியப் பங்களிப்பதாகக் கூறினார்.

கொந்தளிப்பான காலத்திலிருந்து உலகம் தப்பிக்க முடியாது என்பதால் எதிர்காலத்துக்கு ஏற்ப திட்டமிட்டு இப்போதே சரியான அடிகளை எடுத்துவைத்தால் தொடர்ந்து வளர வாய்ப்புகள் இருப்பதாகத் திரு லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்