ஜாலான் புசாரில் வாகன விபத்து: ஓட்டுநர்கள் மருத்துவமனையில்

1 mins read
8c085388-93c2-43d5-a02d-409c650944b4
விபத்துக்குப் பிறகு, சாலையைக் கடந்து கடைகளுக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் நடைபாதையில் லாரி நிறுத்தப்பட்டுள்ளது. - படம்: SCREENGRAB FROM TIEU_MEII/TIKTOK

ஜாலான் புசார், ரோவல் ரோடு சாலைச் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) ஒரு காருக்கும் லாரிக்கும் இடையே விபத்து நடந்துள்ளது.

இரு ஓட்டுநர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அன்றைய தினம் மாலை 4.24 மணிக்கு விபத்து பற்றிய தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்கிறது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் ஒரு லாரி, சாலை ஓரக் கடைகளுக்கு முன் உள்ள பாதசாரி நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

அதன் முன்பக்கக் கண்ணாடி நொறுங்கிய நிலையில், முக்கோண வடிவில் உள்ள தற்காலிக வாகன ஓட்டுநர் என்பதைக் காட்டும் சின்னம் கீழே கிடப்பதும் தெரிகிறது.

லாரிக்குப் பின்னால் சில மீட்டர் தொலைவில் ஒரு வெள்ளை நிற கார் உள்ளது. அதன் வலது முன்புறம் பாதிப்படைந்துள்ளது. அப்பகுதியில் பிரபலமான பெர்சே உணவு மையத்தின் முன் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த உணவு மையத்தில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேல் விவரங்களுக்கு தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்