பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் இயந்திர மனிதன், ‘ஏஐ’ வழிகாட்டி

2 mins read
4c9de9eb-2797-45ea-9784-8ece98c3977f
பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்தின் மின்னிலக்கக் கிராமத்தில் இடம்பெற்றுள்ள இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு வழிகாட்டி மற்றும் கண்கவர் திரை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் பயணிகளுக்கு நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய மின்னிலக்கக் கிராமம் தொடங்கப்பட்டு உள்ளது.

பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் அதனை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) தொடங்கியது.

துணைப் பிரதமரும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கான் கிம் யோங் அந்த மின்னிலக்கக் கிராமத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

பயணிகளையும் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களையும் கவரக்கூடிய வகையிலான தொழில்நுட்ப வசதிகள் அந்தக் கிராமத்தில் அமைந்துள்ளன.

கருப்பொருளை உள்ளடக்கிய அத்தகைய கிராமத்தை எஸ்பிஎஸ் டிரான்சிட் தொடங்குவது இது இரண்டாவது முறை.

போக்குவரத்து நிலையங்களை சமூக நடுவங்களாக உருமாற்றும் நோக்கில் அந்நிறுவனம் அத்தகைய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

எம்ஆர்டி நிலையத்தின் ஆம்பிதியேட்டரில் ‘360 டிகிரி எல்இடி’ திரை உள்ளது. கண்கவர் திரை (Spectacular Screen) என்னும் அந்தத் திரை முப்பரிமாணக் காட்சிகளைக் காட்டும். ஆறு மீட்டர் அகலமாகவும் 2.5 மீட்டர் உயரமாகவும் இருக்கும் அந்தத் திரை பொதுப் போக்குவரத்து நடுவத்தில் அமைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை.

திரைப்படங்களைக் காண்பித்தல், மின்னிலக்கக் காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற சமூக நிகழ்வுகளை ஆதரிக்க அந்தத் திரை பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன், எம்ஆர்-2 என்னும் பெயர் கொண்ட இயந்திர மனிதன் எம்ஆர்டி நிலையத்தைச் சுற்றி வரும். நிலையத்தைச் சுத்தப்படுத்துவதிலும் சுற்றுக்காவல் புரிவதிலும் அது ஈடுபடும்.

இவற்றுடன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதியும் பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் உள்ளது.

போக்குவரத்து தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள, பயணிகள் சேவை முகப்பு முன்பு வரிசையில் நிற்பதற்குப் பதில், ஐவா (AIVA) என்னும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இயந்திரத்திடம் சென்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

எம்ஆர்டி நிலையத்தின் பயண வழிகள், வெளியேறும் வழிகள், கழிப்பறைகள் போன்றவற்றுக்கு உடனடியாக வழிகாட்டுவதோடு பயணச்சீட்டு பற்றிய கேள்விகளுக்கான பதிலையும் ஐவா தரும்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட ஏஐ நிறுவனமான பெந்தியோன் லேப் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஐவா, 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையம், அங் மோ கியோ பேருந்து சந்திப்பு நிலையம் ஆகியவற்றில் பயணிகளுக்கு சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்