ஈசூனில் அறையை வாடகைக்கு விடுவதாகக் கூறி மோசடி; ஆடவர் கைது

1 mins read
27345293-7914-4dda-af9a-fee65f4776b4
ஈசூன் ரிங் சாலையில் உள்ள வீவக புளோக்குகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அறை வாடகை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 34 வயது ஆடவர் ஒருவர் வியாழக்கிழமை (மார்ச் 13) கைது செய்யப்பட்டார்.

ஈசூன் ரிங் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அறைகளை வாடகைக்கு விடுவது குறித்த ஃபேஸ்புக் விளம்பரம் ஒன்றைக் கண்ட ஒருவரிடமிருந்து தனக்குப் புகார் வந்ததாக காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச் 14) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட அந்த நபர், அந்த ஆடவரைத் தொடர்புகொண்டு, பின்னர் முன்பணமாக $2,400க்குமேல் மாற்றிவிட்டார்.

எனினும், அந்த ஆடவர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அறையை வாடகைக்கு விடுவதில் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படுகிறது.

உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அந்தச் சந்தேக நபரை அடையாளம் கண்டு அதே நாள் அவரைக் கைதுசெய்தனர்.

ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக சனிக்கிழமை (மார்ச் 15) அந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

இந்நிலையில், வாடகை மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை நினைவூட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்