புகைமூட்டத்தால் கடைத்தொகுதிகளில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும் சிலர்

புகைமூட்டத்தால் கடைத்தொகுதிகளில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும் சிலர்

படம்: ஜோசப் எஸ்ட்ரெல்லா

18 Oct 2026 - 7:25 pm

1 mins read

சிங்கப்பூரில் 2015க்குப் பிறகு மிக மோசமான புகைமூட்டம் நிலவிவரும் சூழலில், பூங்காக்கள் போன்ற வெளிப்புறங்களில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு வந்த உடற்பயிற்சி ஆர்வலர்கள், கடைத்தொகுதிகளின் உட்புறப் பகுதிகள், யோகா நிலையங்கள், உட்புற உடற்பயிற்சிக் கூடங்களை நாடத் தொடங்கியுள்ளனர்.

பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் வெளியே செல்ல முடியாததால், உட்புற விளையாட்டரங்கங்களை நாடிச் செல்கின்றன.

அக்டோபர் 9ஆம் தேதிமுதல் காற்றுத் தரம் மோசமடைந்ததால், வாரத்திற்கு ஆறு முறை வெளியே ஓடும் காப்புறுதி மேலாளர் எல்மர் லோய் சுவான் ஷெங், தமது வழக்கமான பயிற்சிகளை ரத்துசெய்தார். மரினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் நடைபெற்ற ‘எக்ஸ்-ரன் சிங்கப்பூர்’ உட்புற ஓட்டப்பயிற்சியில் சனிக்கிழமை (அக்டோபர் 17) அவர் பங்கேற்றார்.

சிங்கப்பூர் ரன்னர்ஸ் கிளப் போன்ற குழுக்கள், அக்டோபர் தொடக்கத்திலிருந்து தங்கள் வெளிப்புறப் பயிற்சிகளை ரத்து செய்துள்ளன. காற்றுத்தரம் மோசமடையும்போது படிகளில் ஏறும் பயிற்சிகள், வீட்டு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புகைமூட்டம் காரணமாக கிரேட் ஈஸ்டர்ன் மகளிர் ஓட்டம், சிங்கப்பூர் அரை நெடுந்தொலைவோட்டம் உள்ளிட்ட பல ஓட்டப்பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கார்மின் ரன் ஏற்பாட்டாளர்கள், காற்றுத் தரத்தைத் தொடர்ந்து கண்காணித்து முடிவு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பூங்காக்களுக்கும் திறந்தவெளி விளையாட்டு மையங்களுக்கும் செல்வோரின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. பூங்காக்களுக்குச் செல்ல முடியாத நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பீஷான் அருகிலுள்ள உட்புற விளையாட்டரங்கங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

சனிக்கிழமை காற்றுத் தரம் சற்றுச் சீரானதால், ‘ஆக்டிவ்எஸ்ஜி’ விளையாட்டு மையங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

குறிப்புச் சொற்கள்