சிங்கப்பூர் அதிபர், நாடாளுமன்ற நாயகர், துணை நாயகர்களின் சம்பளங்களில் மாற்றங்களைச் செய்வதற்கான மூன்று தீர்மானங்களுக்கு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
செப்டம்பர் மாதம் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இந்தச் சம்பள மாற்றங்கள் அமைய வேண்டும் என அவைத் தலைவர் இந்திராணி ராஜா தீர்மானங்களை முன்மொழிந்தார்.
அதிபர் அலுவலகச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முதல் தீர்மானத்தின் மூலம், அதிபரின் ஆண்டுச் சம்பளம் $1,568,900லிருந்து $2,568,200ஆக உயர்த்தப்படும்.
பகுதிநேரப் பொறுப்பான நாடாளுமன்ற நாயகரின் சம்பளம், திருத்தப்பட்ட, ‘எம்ஆர் 4’ நிலை அமைச்சர்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட சம்பளத்தில் 50 விழுக்காடாக நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில், ஊக்கத்தொகை, மாறுவிகிதத் தொகை உட்பட மன்ற நாயகரின் ஆண்டுச் சம்பளம் $550,000லிருந்து $900,000ஆக அதிகரிக்கும்.
துணை நாயகர்கள் ஒவ்வொருவருக்கும், நாயகரின் ஆண்டுச் சம்பளத்தில் 15 விழுக்காடு படித்தொகையாக வழங்கப்படும் என மூன்றாவது தீர்மானம் குறிப்பிடுகிறது. ஒரு மாத மாறுவிகிதத் தொகையைக் கணக்கில் கொண்டு, இது ஆண்டுக்கு $135,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் பதவிகளுக்கான சம்பளம் குறித்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற விவாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மூன்று தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன.
இதற்கு முன்னர், 2012ல் அமைச்சர்களின் சம்பளம் குறித்த விவாதத்தைத் தொடர்ந்து இதுபோன்ற தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டன. தற்போதும் அவைத் தலைவர் முன்வைத்த இந்த மூன்று தீர்மானங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாகத் தங்கள் ஆதரவை அளித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
