பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிசிலுள்ள சார்ல் டி கோல் விமான நிலையத்தின் சரக்கு நடுவத்தை சிங்கப்பூரின் சேட்ஸ் நிறுவனம் நிர்வகிக்கிறது.
அந்நடுவத்தை சேட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான வோர்ல்ட்வைட் ஃபிளைட் சர்வீசஸ் இயக்கி வருகிறது.
அவ்விமான நிலையத்தின் சரக்கு நடுவத்தை 1.3 பில்லியன் பவுண்டுக்கு (S$1.9 பில்லியன்) சேட்ஸ் 2023ஆம் ஆண்டில் வாங்கியது.
சேட்ஸ் - வோர்ல்ட்வைட் ஃபிளைட் சர்வீசஸ் கட்டமைப்பு 27 நாடுகளில் 215 நிலையங்களை இயக்குகிறது.
உயிருடன் உள்ள விலங்குகள் மட்டுமன்றி. மருந்துகள், இறைச்சி, பால் போன்றவற்றையும் அந்த விமான நிலையம் கையாள்கிறது.
பிரான்ஸ், 2024ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டதாகவும் அவற்றில் 70 விழுக்காடு சார்ல் டி கோல் விமான நிலையத்தைச் சேர்ந்தவை என்றும் வோர்ல்ட்வைட் ஃபிளைட் சர்வீசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு லோரன்ட் பெர்னாட் கூறினார்.
புதன்கிழமையன்று (ஜூன் 4) சார்ல் டி கோல் சரக்கு நிலையத்தைச் செய்தியாளர்கள் முதல்முறையாகச் சுற்றிப் பார்த்தனர்.
இதற்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வோர்ல்ட்வைட் ஃபிளைட் சர்வீசஸ் அதிக கவனம் செலுத்தியதாக திரு பெர்னாட் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவிலும் அது வளர்ச்சி கண்டதாகத் தெரிவித்த திரு பெர்னாட், ஆசியாவில் அதன் செயல்பாடு மிகவும் குறைவாக இருந்ததாகக் கூறினார்.
ஆனால், சேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்த பிறகு உலகளாவிய நிலையில் தடம் பதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

