தென் தாய்லாந்தின் ஹாட் யாய் நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் அந்நகருக்கான விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) பயணத்துக்கான இரண்டு விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக ஸ்கூட் அறிவித்துள்ளது.
ஸ்கூட் விமானம், ஹாட் யாய் நகரை நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.05 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதும் அதே நாள் மாலை 4.05 மணிக்கு அந்த நகரில் இருந்து சிங்கப்பூர் திரும்பி வருவதும் வழக்கம்.
சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பயணிகள், சேவை மீளும்போது பயணத்தைத் தொடர விரும்பாத பட்சத்தில் முழுக்கட்டணத்தையும் திரும்பப் பெறலாம் என்றும் ஸ்கூட் தெரிவித்துள்ளது.
அல்லது அதே நகருக்கான வேறொரு ஸ்கூட் விமானத்தை அவர்கள் பதிவு செய்யும் தெரிவுகளையும் தான் வழங்குவதாக அது குறிப்பிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது.

