சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்கீழ் செயல்படும் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான ஸ்கூட், தென்மேற்குச் சீனாவில் உள்ள குய்யாங் நகருக்கு அக்டோபர் 26ஆம் தேதிமுதல் புதிய விமானச் சேவைகளைத் தொடங்குகிறது.
வாரத்திற்கு மூன்று விமானங்களை அந்நகருக்கு ஸ்கூட் இயக்கவிருக்கிறது. அவற்றையும் சேர்த்து, சீனாவில் 16 நகரங்களுக்கு ஸ்கூட் வாரந்தோறும் 81 விமானச் சேவைகளை இயக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) தொடங்குகின்றன. ஏர்பஸ் 320நியோ வகை விமானத்தில் குய்யாங் செல்வதற்கான ஒருவழிப் பயணக் கட்டணம், வரிகள் உட்பட $158லிருந்து தொடங்குகிறது.
சீனாவின் குய்ஸோ மாநிலத் தலைநகரான குய்யாங், எழில்மிகு இயற்கை வளங்களுக்கும் பழைமையான கலாசாரத்திற்கும் பெயர் பெற்றது. ஆண்டிறுதிப் பயணத் தேவையைப் பூர்த்தி செய்ய பிற முக்கிய இடங்களுக்கும் விமானச் சேவைகள் அதிகரிக்கப்படுகின்றன.
சேவை அதிகரிப்பு குறித்த விவரங்கள்
* தாய்லாந்தின் ஹாட் யாய் (அக்டோபரிலிருந்து வாரம் 12-14 முறை)
* புக்கெட் (அக்டோபரிலிருந்து வாரம் 17-21 முறை)
* பிலிப்பீன்சின் கிளார்க் (டிசம்பரிலிருந்து வாரம் 7-10 முறை)
* மலேசியாவின் கோத்தா கினபாலு (2027 ஜனவரியிலிருந்து வாரம் 10-13 முறை)
* ஜப்பானின் ஒக்கினாவா (அக்டோபரிலிருந்து வாரம் 4-5 முறை)
* இந்தியாவின் திருச்சிராப்பள்ளி (டிசம்பரிலிருந்து வாரம் 12-14 முறை)
வியட்னாமின் ஃபூ குவோக்கிற்கு அன்றாடம் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அக்டோபர் மாதத்திலிருந்து படிப்படியாக எம்பிரேயர் இ190-இ2 வகை விமானங்களுக்குப் பதில் ஏர்பஸ் 320 வகை விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஸ்கூட் தலைமை நிர்வாகி லெஸ்லி தங் தெரிவித்தார்.


