மூத்தோரின் தொடர்ச்சியான கற்றலுக்கு வழியமைத்துக் கொடுத்து, அவர்கள் மன, சமூக ரீதியாக ஈடுபாடு கொண்டிருப்பது தொடர்பில் ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரியில் பயிலும் துளசிராமன் நிகிடா, 17, இதர கல்விக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
நிகிடாவைப் போல பல்கலைக்கழகத்திற்கு முந்திய கல்வி மேற்கொள்ளும் 552 மாணவர்கள் சிங்கப்பூர் சந்திக்கும் சவால்களை முறியடிப்பதற்கான புத்தாக்க வழிகளைத் தேடும் திட்டத்தில் அண்மையில் கைகோத்தனர்.
56வது முறையாக நடைபெற்ற பல்கலைக்கழகத்திற்கு முந்திய கருத்தரங்கில் பங்கேற்ற இந்த மாணவர்கள், பல்வேறு கல்விக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து, கலந்துரையாடி சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தீர்வுகளை ஆராய்ந்தனர்.
சிங்கப்பூரின் வருங்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை கருத்தரங்கின் மையப்புள்ளியாக விளங்கியது
இவ்வாண்டு கல்வி அமைச்சும் தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த அந்நிகழ்வு, மார்ச் மாதத்தில் தொடங்கி இந்த மாதம் நிறைவுபெற்றது.
ஜூன் 2லிருந்து 5ஆம் தேதி வரை கருத்தரங்கு நடைபெற்றது. அதற்கு முன்னரே மாணவர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
‘மறுகற்பனை’ என்ற இவ்வாண்டின் கருப்பொருளுக்கேற்ப மாணவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்களின் புத்தாக்கச் சிந்தனையை சோதிக்கும் திட்டங்களில் ஈடுபட்டனர்.
‘செழிக்க’, ‘இணைக்க’, ‘வளர’ என்ற மூன்று துணை கருப்பொருள்களில் இன்னும் வலுவான சிங்கப்பூரை உருவாக்க பல்வேறு விவகாரங்கள், கொள்கைகள், கண்ணோட்டங்கள் சார்ந்த தகவல்கள் மாணவர்களிடம் பகிரப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பள்ளியால் இதில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிகிடா, புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுமானால் ஏற்கெனவே இருக்கும் தீர்வை மேம்படுத்துவதே சரி எனக் கற்றுக்கொண்டார்.
பல்வேறு கல்வி கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து இதில் ஈடுபட்டதன் மூலம் நிகிடா, தமது குழுவில் இருந்த 21 மாணவர்களுடன் தலைமுறைகளுக்கு இடையேயான கற்றல் மூலம் மூத்தோரின் வாழ்நாள் கற்றல் அனுபவத்தை மெருகூட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
“இத்திட்டம் 2060களில் எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டோம். இப்போது மூத்தோர் பலர் தனிமையில் உள்ளனர். இன்னும் எதிர்காலத்தில் நிலை எவ்வாறு இருக்கும் என்று நமக்குத் தெரியாது. அதனால், மூத்தோருக்கு தேவைப்படும் அனுபவத்தை உருவாக்க முனைந்தோம்,” என்றார் நிகிடா.
‘தி சில்வர் ஸ்பார்க்ஸ் புரோஜெக்ட்’ எனப்படும் அத்திட்டம் எதிர்காலத்தில் வீவக வீடுகளின் அடித்தளத்தில் அமைக்கப்படும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. அதில் ஈடுபடும் மூத்தோருக்கு இளவயதினர் பலவற்றைக் கற்றுத்தருவர் என்பதுதான் முக்கியக் கூறாகும்.
இந்த ஆண்டு ‘ஏ’ நிலைத் தேர்வுகள் எழுதவுள்ள நிகிடா, நேரத்தை நன்கு வகுத்து இதில் ஈடுபட்டார்.
பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில விரும்பும் நிகிடா, இதுபோன்ற கருத்தரங்கில் பங்கேற்பதைப் படிக்கல்லாகப் பார்க்கிறார்.

