பிடோக் காவல்துறைப் பிரிவின் தலைமையகத்தில் தமது தனிநபர் நடமாட்ட சாதனத்தை நிறுத்த அனுமதி வழங்காததால் சுபன் அஃப்ரின் என்னும் ஆடவர் அங்கிருந்த துணை காவல் அதிகாரியை வசைபாடி அச்சுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி நடந்தது.
சுபன் அதிகாரியின் காலில் தனிநபர் நடமாட்ட சாதனத்தை வைத்து இடித்துள்ளார்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் 40 வயது சுபன் இரண்டு வழிப்போக்கர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியது, காதலியை இரண்டு முறை அடித்தது என பல குற்றச் செயல்களில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த ஜனவரி மாதம் சுபனுக்கும் அவரது 60 வயது காதலிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காதலியை சுபன் தள்ளியுள்ளார். அதில் அப்பெண்ணின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. அதன் பின்னர் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிடோக் நார்த் பகுதியில் சுபன் 17 மீட்டர் ‘பிளேட்’ கொண்டு மிரட்டியுள்ளார், மேலும் மற்றொரு கத்தியை தமது கால்சட்டையில் வைத்திருந்தார்.
சுபன் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) ஒப்புக்கொண்டார்.
சுபனுக்கு 7 மாதம் 14 வார சிறைத் தண்டனையும் 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சுபன் 2003ஆம் ஆண்டு முதல் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகவும் அவருக்கு குறைந்தது 10 முறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருட்டு, போதைப்பொருள் உட்கொள்வது, அநாகரிமாக நடந்துகொள்வது, மிரட்டுவது, கடுமையான காயங்களை ஏற்படுத்துவது போன்ற குற்றச் செயல்களில் சுபன் அடிக்கடி ஈடுபட்டுள்ளார்.
இதற்கு முன், காயம் ஏற்படுத்தியது, பொது இடத்தில் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றங்களுக்காக சுபனுக்கு 5 ஆண்டுகள் சீர்திருத்த சிறை, 10 பிரம்படிகள், உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டன.