தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பூன் லே, புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே 25 நிமிட தாமதம்

கிழக்கு- மேற்கு ரயில் பாதையில் சேவை கோளாறு

2 mins read
159ee4a4-cac2-4327-a608-506c4708161f
ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை 8 மணிக்குக் காணப்பட்ட கூட்டம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பில் தொடர்ச்சியாகக் கடந்த சில மாதங்களில் ஏற்பட்டுள்ள சேவைத் தடங்கல் வருத்தமளிப்பதாகத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்துத் துறை இன்னும் சிறப்பாகச் செயல்படலாம் என்றார் அவர்.

புதன்கிழமை (ஆகஸ்ட் 6) கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட சேவைத் தடங்கள் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்துக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்பியது.

கடந்த சில மாதங்களில் தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை, புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதை ஆகியவற்றிலும் சேவைத் தடங்கல் ஏற்பட்டதைத் திரு சியாவ் சுட்டினார்.

“ரயில் சேவையால் தாமதமோ, தடங்கலோ ஏற்படும்போது பயணிகளுக்கு ஏற்படும் எரிச்சலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அது ஒரு முழு நாளையும் அந்த நாளுக்குரிய திட்டங்களையும் தாறுமாறாக்கும்,” என்று திரு சியாவ் குறிப்பிட்டார்.

ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்தில் பயணம் செய்த பல பயணிகள் வேலைக்குத் தாமதமாகச் செல்ல நேர்ந்ததாகக் கூறினர்.
ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்தில் பயணம் செய்த பல பயணிகள் வேலைக்குத் தாமதமாகச் செல்ல நேர்ந்ததாகக் கூறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எனினும் ரயில் தாமதங்களை முழுமையாக நீக்க முடியாது என்றும் அவ்வப்போது அந்தத் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், தாமதத்தின்போது பயணிகளுக்கு அதுபற்றித் தெரிவிக்கும் நடைமுறை நிச்சயமாக மேம்படுத்தப்படலாம் என்ற திரு சியாவ், பயணம் செய்வதற்கான மாற்று வழிகளை அவர்கள் கண்டறிய உதவ வேண்டும் என்றார்.

“இனி நிலப் போக்குவரத்து ஆணையம் ரயில் நிறுவனங்களுடன் இணைந்து சேவைத் தடங்கலின்போது எவ்வாறெல்லாம் பயணிகளுக்குக் கைகொடுக்கலாம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளும்,” என்றார் திரு சியாவ்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி கிழக்கு-மேற்கு ரயில் பாதை ஐந்து மணி நேரத் தடங்கலுக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்பியது.

காலை 6 மணியளவில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பயணங்கள் பாதிக்கப்பட்டன.

ரயில் சந்திப்புகளில் ஒரு தண்டவாளத்திலிருந்து மற்றோர் தண்டவாளத்திற்குச் செல்லும் ரயிலைக் கட்டுப்படுத்தும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதே சேவை தடங்கலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இலவசப் பேருந்து சேவைகளும் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

காலை 6.30 மணியளவில் டோவர், ஜூரோங் ஈஸ்ட், சைனீஸ் கார்டன், லேக் சைட் ஆகிய நிலையங்களும் பாதிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

காலை 7.15 மணியளவில் 25 நிமிடம் வரை தாமதம் நீடிப்பதாகச் சொன்ன எஸ்எம்ஆர்டி பாதிக்கப்பட்ட நிலையங்களில் இலவச பேருந்துச் சேவைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டது.

தாமதத்தைக் காட்டும் அறிவிப்பு.
தாமதத்தைக் காட்டும் அறிவிப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேற்கு நோக்கிச் செல்லும் ரயில் சேவை வழக்கம்போல தொடர்கின்றன என்றும் நிறுவனம் கூறியது.

ஜூரோங் ஈஸ்ட் நிலையத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி ரயில்கள் மெதுவாக ஓடியதாக எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் லாம் ‌ஷியு காய் சொன்னார்.

ரயில் சந்திப்புகளில் தடம் மாறும் ரயில்களைக் கட்டுப்படுத்தும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக விளக்கம் அளித்த அவர், பொறியாளர்கள் அதைச் சரிசெய்வதாகக் குறிப்பிட்டார்.

பல பயணிகள் 45 நிமிடங்கள் வரை நிலையங்களில் காத்திருக்க நேர்ந்ததால் வேலைக்குத் தாமதமாகச் செல்ல நேர்ந்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

ஒருசிலர் வடக்கு- தெற்கு ரயில் பாதையில் உள்ள மார்சிலிங், அட்மிரால்டி, கிராஞ்சி ஆகிய நிலையங்களில் கூடுதல் நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது என்றும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்