ஏர் ஏஷியாவின் இணை நிறுவனரான திரு டோனி ஃபெர்னாண்டஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சேவையைப் பாராட்டிய அதேவேளை அதன் உணவைக் குறைகூறியுள்ளார்.
இம்மாதம் 1ஆம் தேதி இன்ஸ்டகிராமில் அதுகுறித்து பதிவிட்ட திரு ஃபெர்னாண்டஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படத்தைப் பதிவிட்டார்.
ஏர் ஏஷியா விமானச் சேவை கிடைக்காததால் எஸ்ஐஏவில் பயணம் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
‘விமானச் சேவையும் இணையச் சேவையும் அருமை’ என்று பதிவிட்ட அவர், ‘உணவின் தரம் குறைவாக இருந்தது’ என்றார்.
கெருசலில் திரு ஃபெர்னாண்டசின் பதிவில், விமானத்தில் தமக்கு வழங்கப்பட்ட உணவின் படம் காணப்பட்டது. அதில் மாட்டிறைச்சியும் காய்கறிகளும் அடங்கிய சிவப்பு நிற குழம்பில் நூடுல்ஸ் இருந்ததைக் காண முடிகிறது.
ஏர் ஏஷியாவிற்கு உணவு வழங்கும் சான்டான் நிறுவனத்தைப் பாராட்டிய திரு ஃபெர்னாண்டஸ், அது இன்னும் சிறப்பானது என்றார்.
தமது எஸ்ஐஏ பயணம் மிகவும் சிறப்பானதாக இருந்தது என்றும் ஏர் ஏஷியா அதைவிட பின்தங்கிய நிலையில் இல்லை என்றும் அவர் இறுதியில் கூறினார்.
எஸ்ஐஏ விமானங்களில் வழங்கப்படும் உணவைக் குறைகூறிய பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் அதுபற்றி பதிவிட்டிருந்த நிலையில் திரு ஃபெர்னாண்டஸ் கருத்துரைத்திருக்கிறார்.
லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு எஸ்ஐஏ விமானத்தில் பயணம் செய்த அந்தப் பயணி, விமானத்தில் வழங்கப்பட்ட மீனில் ருசி இல்லை என்றும் மிகவும் கெட்டியாக இருந்தது என்றும் செப்டம்பர் 2ஆம் தேதி பதிவிட்டார்.
காலை உணவு அதைவிட மோசமான இருந்தது என்றார் அவர்.
“காய்ந்துபோன, குழம்பு இல்லா, உப்பு அதிகம் உள்ள உணவு. அதில் மிகவும் சிறிய அளவில் மட்டுமே இறைச்சித் துண்டுகள் இருந்தன,” என்று அந்தப் பயணியின் பதிவு சுட்டியது.
இம்மாதம் 29ஆம் தேதி, எஸ்ஐஏ நிறுவனம் புதிய சமையல் வல்லுநரின் உணவு வகைகளுடன் விமான அனுபவத்தை மேம்படுத்தப்போவதாக அறிவித்தது.
அனைத்து வகுப்புப் பிரிவுகளிலும் 100க்கும் மேற்பட்ட புதிய, மறுவடிவமைக்கப்பட்ட உணவு வகைகளை வழங்கப்போவதாக அது கூறியது.
