மோசடிகளுக்கு எதிராகச் செயல்படும் வங்கிகள், தங்களின் கண்காணிப்புப் பொறுப்பின் ஒரு பகுதியாக $50,000க்கும் குறைந்த தொகை தொடர்பான பரிவர்த்தனையைத் தடுக்கவோ நிறுத்திவைக்கவோ முற்பட்டால், பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடும் என்று நாடாளுமன்றத்தில் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறினார்.
வங்கிகள் எடுக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், ‘அதிகப்படியான தவறான எச்சரிக்கைகள்’ ஏற்படக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
மோசடியில் ஏற்படும் இழப்பை வங்கி போன்ற நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எந்த வகையில் பகிர்ந்துகொள்ளலாம் என்பதை விளக்கும் புதிய கட்டமைப்பு, டிசம்பர் 16ஆம் தேதி அறிமுகம் காணவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திரு டான் பதிலளித்தார்.
இந்தக் கட்டமைப்பு முதன்முதலில் 2022ஆம் ஆண்டு முற்பாதியில் முன்வைக்கப்பட்டது. தங்களின் பொறுப்புகளைச் சரிவர செய்யாத பட்சத்தில், நிறுவனங்கள் பணம் செலுத்தும் பொறுப்பை ஏற்பதற்குக் குறிப்பிட்ட சில கடமைகளை இந்தக் கட்டமைப்பு விளக்குகிறது.
இந்நிலையில், $50,000 என்ற வரம்பு எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த திரு டான், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கும் சட்டபூர்வ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பயனாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்துக்கும் இடையே சமநிலை காண்பது அவசியம் என்றார்.

