தீவிரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஏழு இஸ்ரேலியக் குடும்பங்கள் தேர்தலில் போட்டி

தீவிரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஏழு இஸ்ரேலியக் குடும்பங்கள் தேர்தலில் போட்டி

படம்: ராய்ட்டர்ஸ்

05 Oct 2026 - 8:12 pm

2 mins read

டெல் அவிவ்: இஸ்ரேலில் அக்டோபர் 7ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்தத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குறைந்தது ஒன்பது இஸ்ரேலியர்கள் இம்மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட கட்சிகளை அவர்கள் பிரதிநிதித்தாலும் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட வடுக்களை குணப்படுத்துவதே தங்களின் நோக்கம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

2023ல் தெற்கு இஸ்ரேலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் 1,200 பேரைக் கொன்றதோடு 251 பேரை காஸாவிற்குப் பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.

கிப்புட்ஸ் கிராமத்தில் தாக்குதலை நடத்திய ஹமாஸ் போராளிகளுக்கு எதிராகப் போராடிய மிஷல் ஹிர்ஷ் நெக்ரியின் மகன் ரோய் உயிரிழந்தார்.

முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் தலைமையிலான ‘டுகெதர்’ கட்சி சார்பில் 60 வயதான ஹிர்ஷ் நெக்ரி போட்டியிடுகிறார்.

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் தேசியவாத-சமயக் கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்சி செயல்படுகிறது.

“என் மகன் ரோய், எப்போதும் நிலைமையைப் பார்த்து, அதை ஆராய்ந்து, சரி, இப்போது அதைச் சரிசெய்ய நாம் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பான்,” என்று அவர் கூறினார்.

அவருடன் போட்டியிடும் சக வேட்பாளர்களில் ஒருவரான 64 வயதான நோம் திபோன் ஒரு முன்னாள் ராணுவ ஜெனரல் ஆவார். ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு கிப்புட்ஸ் கிராமமான நஹால் ஓஸில் அமைந்திருந்த தனது வீட்டில், திபோனின் மகன் தனது இளம் குடும்பத்துடன் சிக்கியிருந்தார். தனது மகனை மீட்க திபோனும் அவரது மனைவியும் டெல் அவிவிலிருந்து புறப்பட்டு, வழியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் போரிட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“அக்டோபர் 7 என்பது நமது வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியாகும், அதை நான் என் சொந்தக் கண்களால் பார்த்தேன்,” என்றார் அவர்.

இருப்பினும், பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கான பழியை நெட்டன்யாகு ஏற்க மறுப்பதோடு, சுய விசாரணைக்கான கோரிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

‘இஸ்ரேல் நமது தாயகம்’ என்ற கட்சி சார்பில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான 51 வயது ஷரோன் ஷராபி, பேரி கிராமத்திலிருந்து ஹமாஸால் கடத்தப்பட்ட தனது சகோதரர்கள் உட்பட காஸா பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் இஸ்ரேலிய தலைமையின் தோல்விகளைத் தான் நேரில் கண்டதாகக் கூறுகிறார்.

“எனது வாழ்க்கையை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிட்டு இஸ்ரேல் நாட்டின் உண்மையான மதிப்பை மீட்டெடுக்க வேண்டும். அதைச் சீரமைப்பதற்கான ஒரு பணியில் இறங்க வேண்டும் என்பதே எனது நோக்கம்,” என்றார்.

தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. இவரைப் போன்று ஒன்பதுக்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் பங்காற்ற வேண்டும் என்று தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இஸ்ரேல்தேர்தல்ஹமாஸ்தாக்குதல்