ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அறிமுகமான மாது ஒருவரின் வீட்டில் சீரமைப்புப் பணிகளை செய்யச் சென்றிருந்த ஒப்பந்ததாரர், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அவரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள கோ லீ ஹுவா என்ற 49 வயது ஆடவருக்கு 12 ஆண்டு, மூன்று வார சிறையுடன் 13 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை, மானபங்கம் உள்ளிட்ட நான்கு குற்றங்கள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. தீர்ப்பு வழங்கிய நீதிபதி மேவிஸ் சியோன், மாதின் சம்மதத்தோடு தான் அச்செயலைப் புரிந்ததாகக் குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தை நிராகரித்தார்.
தீர்ப்பை எதிர்த்து கோ மேல்முறையீடு செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர் $80,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளிக்கு அந்த மாதுடன் பல ஆண்டுகள் தொடர்பு இருந்துள்ளது. வீட்டில் உள்ள சீரமைப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர் அந்த மாதின் வீட்டுக்குப் பலமுறை சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாம் முறையாக, நேர்மையாக நடப்பவர் எனவும் அந்த மாதுதான் தம்மை சுயமாக இழுத்தார் எனவும் பாலியல் நடவடிக்கை பத்தே நிமிடங்களில் முடிந்துவிட்டதாகவும் குற்றவாளி கூறிய விளக்கங்கள் அனைத்தையும் நீதிபதி நிராகரித்து மாதின் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டார்.

