ஒரு மில்லியன் பேர் ரசித்துள்ளஎஸ்ஜி60 தேசியக் கண்காட்சி

2 mins read
cddfa208-3842-428e-8f48-fed2a5b891df
ஹார்ட் & சோல் கண்காட்சியை மூன்று மாதங்களில் ஒரு மில்லியன் பேர் கண்டு ரசித்துள்ளனர். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரின் 60வது ஆண்டு சுதந்திர நாள் பல்வேறு வழிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசியக் கண்காட்சி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

ஆர்ச்சர்ட் நூலகத்தில் நடைபெறும் ‘உயிரும் உணர்வும்’ (ஹார்ட் & சோல்) என்ற அந்தக் கண்காட்சியைக் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.

சென்ற ஆகஸ்ட் மாதம் தேசியக் கண்காட்சி அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கண்காட்சியைப் பார்ப்பதற்கான நேரம், வார இறுதி நாள்களில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு முடிவடைந்துவிடுகின்றன. இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். ஆனால் கண்காட்சியின் சில பகுதிகளுக்குச் செல்ல அனுமதிச் சீட்டுகள் தேவை. இன்று வரை 122,000க்கும் மேற்பட்ட நுழைவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியின் அனுபவம் பற்றி கருத்துக் கணிப்பு நடத்தியபோது பெரும்பாலோர் ஐந்துக்கு நான்கு என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளனர்.

நவம்பர் 24ஆம் தேதி தமது சமூக ஊடகப் பதிவில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

“கண்காட்சிக்கு வந்த இளையர்களும் முதியவர்களும் பல உணர்வுகளைக் கொண்ட சிங்கப்பூரின் பயணத்தைத் தனித்துவமான பார்வையில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“இது, ஒரே நாடாகப் பகிரப்பட்ட பயணத்தின் இதயப்பூர்வமான கொண்டாட்டமாகும். பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவங்களையும் ஆர்வத்தையும் தந்து ஒருவரை ஒருவர் இணைக்க உதவுகிறது,” என்றார் அவர்.

இந்தக் கண்காட்சி, 110 பங்காளிகளுடன் சேர்ந்து எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்கிறது. முன்னேறு சிங்கப்பூர், சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 உள்ளிட்டவை அவற்றில் சில. அனைவரையும் உள்ளடக்கிய மின்னிலக்க சமூகத்தில் சேர்ந்து முன்னேறுவதையும் கண்காட்சி காட்டுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்காட்சியின் சில அம்சங்கள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ‘விண்டோஸ் இன் த ஸ்கை’, ‘வீல்ஸ் ஆஃப் டைம்’, ‘கால் மீ இன் த ஃபியூச்சர்’, ‘டைம் டிராவலர்’ போன்றவை அதிகம் விரும்பும் அங்கங்களாக உள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள சில காட்சிகள் சிங்கப்பூருடன் சேர்ந்து பயணிக்கும் அனுபவத்தைத் தருகிறது.

குறிப்புச் சொற்கள்