பராமரிப்பு நிலையங்களில் இருப்பதைவிட சமூகச் சூழலில் மூப்படைய விரும்பும் மூத்தோர் கூடிய விரைவில் கழக வீடுகளிலோ, தனியார் வீடுகளிலோ பிற மூத்தோருடன் தங்கிக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறவிருக்கின்றனர்.
அங்கு அன்றாட வேலைகளைச் செய்வதற்கான அடிப்படை ஆதரவை பராமரிப்பு ஊழியர்கள் வழங்குவர்.
மூத்தோருக்கான பகிரப்பட்ட குடியிருப்புப் பராமரிப்புச் சேவைகள் குறித்து சுகாதார அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 10) அறிவித்தது.
புதிய கட்டமைப்பில் இணைய விருப்பமுள்ள நிறுவனங்கள் கூடுதல் வெளிநாட்டுப் பராமரிப்பாளர்களைப் பணியமர்த்த விண்ணப்பம் செய்யலாம் என்று அமைச்சு சொன்னது.
பராமரிப்பு ஊழியர்களுக்கான பயிற்சிக் கட்டணங்களில் 90 விழுக்காடு வரையிலான கழிவுகளுக்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
செயிண்ட் லியூக்ஸ் மூத்தோர் பராமரிப்புக் குடியிருப்பை அடிப்படையாகக் கொண்ட சேவைகளின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பேசினார்.
ஒவ்வொரு மூத்தோரும் இல்லப் பராமரிப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவதைவிட பகிரப்பட்ட சேவையைப் பயன்படுத்திக்கொள்வது இன்னும் பலனளிக்கும் என்று அமைச்சர் ஓங் சொன்னார்.
“சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படையும் வேளையில் மூத்தோருக்கு வெவ்வேறு தேவைகளும் விருப்பங்களும் இருக்கும் என்பதை அறிகிறோம். துடிப்பாகவும் யாருடைய துணையும் இன்றி அவர்கள் வாழ முடிந்த அளவுக்கு ஆதரவு தரவேண்டும்,” என்று திரு ஓங் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய பராமரிப்புக் கட்டமைப்பை 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுகாதார அமைச்சு சோதித்துப் பார்த்தது.
அது நல்ல பலன் கொடுத்ததை அடுத்து மூத்தோருக்கான பகிரப்பட்ட பராமரிப்புத் திட்டத்தைச் சுகாதார அமைச்சு விரிவுபடுத்துகிறது.
ஒரே வீட்டில் குடியிருக்கும் மூத்தோரின் அன்றாடத் தேவைகள், உணவு, சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களைச் சோதனைத் திட்டம் உள்ளடக்கியது.
பராமரிப்பாளர்கள் வீட்டில் எவ்வாறு ஆதரவளிப்பார்களோ அதேபோல பகிரப்பட்ட இல்லத்திலும் மூத்தோருக்கு அதே பராமரிப்பை வழங்கினர்.
இவ்வாண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி ஐந்து நிறுவனங்கள் மொத்தம் 232 மூத்தோருக்குச் சேவை வழங்கும் அளவுக்குத் திட்டம் விரிவடைந்தது.
இத்தகைய சேவைக்குக் குடும்பங்கள், பராமரிப்பாளர்கள் ஆகியோரின் ஆதரவு அவசியம் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

