மேலும் இணக்கமாகச் செயல்படுவது குறித்துப் பேசவுள்ள சிங்கப்பூர் மலேசியப் பிரதமர்கள்

2 mins read
5f23baac-2c7c-4622-bd6d-193fed6861ba
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிங்கப்பூர் வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12வது சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பு வியாழக்கிழமை (டிசம்பர் 4) சிங்கப்பூரில் நடக்கவுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கலந்துகொள்ளும் இந்தச் சந்திப்பில், சுகாதாரம், போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றில் மேலும் இணக்கமாகச் செயல்படுவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேசவுள்ளனர்.

பிரதமர் வோங்கின் அழைப்பை ஏற்று திரு அன்வார் சிங்கப்பூர் வருகிறார் என்று வெளியுறவு அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான வருடாந்தரச் சந்திப்பு, நீண்டகால விவகாரங்களைச் சமாளிப்பதற்கும் ஒத்துழைப்பு தேவைப்படும் புதிய துறைகளில் பணியாற்றுவதற்கும் ஒரு முக்கியத் தளமாகும். மேலும், இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் பேசுவார்கள்.

தலைவர்களின் சந்திப்பு தி ரிட்ஸ்-கார்ல்டன் மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெறுகிறது. திரு அன்வாருக்கு மதிய விருந்தளிப்பார் பிரதமர் வோங். பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடுவார்கள்.

இருநாட்டுப் பிரதமர்களும் நிதி அமைச்சர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு அன்வாருடன் மலேசியத் துணைப் பிரதமரும் எரிசக்தி மற்றும் நீர்த் துறைக்கான அமைச்சர் ஃபடில்லா யூசோஃப், வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான், போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், உள்துறை அமைச்சர் சைஃபுதீ நசு‌‌ஷன், பொருளியல் தற்காலிக அமைச்சர் அமீர் ஹம்சா அசிசன், ஜோகூர் முதல்வர் ஓன் ஹாஃபிஸ் ஹாஸி ஆகியோரும் சிங்கப்பூர் வருகின்றனர்.

சிங்கப்பூர் சார்பில் துணைப்பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் உள்ளிட்டவர்களும் கலந்துகொள்கின்றனர்.

கடந்த ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற்ற இவ்வாண்டு சந்திப்பில் பிரதமர் வோங், மலேசியப் பிரதமர் அன்வாரைச் சந்திக்க மலேசியாவில் உள்ள புத்ராஜெயாவுக்குச் சென்றார்.

குறிப்புச் சொற்கள்