‘உலகின் முன்னணிக் கொள்கலன் துறைமுகங்கள்’ என்ற தலைப்பில் புதன்கிழமை (நவம்பர் 26) வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிய தரநிலைகளின் படி சிங்கப்பூர் ஆகச்சிறந்த கொள்கலன் துறைமுகமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
முக்கிய அளவுகோல்களை முன்வைத்து, துறைமுகங்களை வரிசைப் படுத்தும் டிஎன்வி (DNV) அமைப்பும் மேனன் இக்கனாமிக்ஸ் (Menon Economics) வர்த்தக ஆலோசனை நிறுவனமும் அந்த அறிக்கையை தயாரித்துள்ளன.
பிஎஸ்ஏ சிங்கப்பூர் மற்றும் ஜூரோங் துறைமுகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிங்கப்பூர் துறைமுகம் அனைத்து அளவுகோல்களிலும் முதலிடத்தைப் பெற்றது.
சிங்கப்பூரைத் தொடர்ந்து சீனாவின் ஷங்காய், நிங்போ சௌஷான், தென்கொரியாவின் பூசான், நெதர்லாந்தின் ரோட்டர்டாம் ஆகிய துறைமுகங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
எட்டு நகரங்களைச் சேர்ந்த 41 நிபுணர்கள் வரைந்துள்ள இந்த தன்னிச்சையான ஆய்வில் 160 துறைமுகங்கள் இடம்பெற்றன. அடிப்படை அம்சங்களான நிர்வாகம், முதலீடு, கையாளும் திறன் ஆகியன அதில் இடம்பெற்றன. வாடிக்கையாளர்களுடனான தொடர்பு, அவர்களின் மதிப்பீடு, உற்பத்தித் திறன், நீடித்தநிலைத்தன்மை ஆகியவையும் கருத்தில்கொள்ளப்பட்டன.
இறுதியாக, பொருளாதாரப் பங்களிப்பு, சந்தைச் செல்வாக்கு மற்றும் வட்டார முக்கியத்துவம் உள்ளிட்ட ஒரு துறைமுகம் ஏற்படுத்தக்கூடிய ஒட்டுமொத்த தாக்கத்தையும் ஆய்வு உள்ளடக்கியது.
வட்டார மற்றும் உலகளாவிய கப்பல் வழித்தடங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, வெளிப்படைத்தன்மையான நிர்வாகம், திறமையான ஒருங்கிணைப்பு ஆகியவையும் முடிவுகளுக்குக் காரணமாக அமைந்தன என்று ஆய்வை நடத்திய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இவற்றோடு, சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த கப்பல் தொழில்துறையில் பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கெனச் செய்துள்ள முதலீடுகள் ஆகியன கவனத்தில் கொள்ளப்பட்டன. சிங்கப்பூரின் உத்திகளுக்கு மையமாகத் திகழும் துவாஸ் துறைமுகத்தில் கடந்த 2022 முதல் செய்யப்பட்டுவரும் மேம்பாடுகளும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் துறைமுகம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 10 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டது முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் முழுதும் இயந்திரமயமாக்கப்பட்டு, 2040ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் துவாஸ் துறைமுகம் ஆண்டுக்கு 65 மில்லியனுக்கும் மேற்பட்ட கொள்கலன்களைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

