உலகளாவிய நிலையற்றத்தன்மை நீடித்துவரும் நிலையில், வர்த்தகங்கள் பலவீனமடைந்து வருகின்றன.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்திடமிருந்து கூடுதல் ஆதரவை சிங்கப்பூர் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
அதிகரித்து வரும் செலவினங்களைச் சமாளிக்கவும் உள்ளூர் ஊழியரணியை மேம்படுத்தவும் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் கூடுதல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளதாகச் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியிடப்பட்டன.
செப்டம்பர் 29ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 17ஆம் தேதி வரை மொத்தம் 553 வர்த்தகங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கெடுத்த நிறுவனங்களில் மொத்த விற்பனை, நிதி மற்றும் காப்புறுதி நடவடிக்கைகள், உற்பத்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் அடங்கும்.
அவற்றில் 82 விழுக்காடு நிறுவனங்கள் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 18 விழுக்காடு நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள்.
தொடர்புடைய செய்திகள்
மனிதவளச் செலவுகள், சேவைக்கான தேவையில் ஏற்பட்டுள்ள நிலையற்றத்தன்மை, வாடகைச் செலவினங்கள் ஆகியவை வர்த்தகங்களைப் பாதிப்பதாகச் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி கோக் பிங் சூன் தெரிவித்தார்.
இவ்வாண்டு நிறுவனங்கள் எதிர்கொண்ட சவால்களில் முதல் மூன்று இடங்களில் (வரிசைப்படி) மனிதவளச் செலவுகள் (63 விழுக்காடு), வாடிக்கையாளர் தேவை நிலையற்றத்தன்மை (44 விழுக்காடு), வாடகைச் செலவுகள் (40 விழுக்காடு) ஆகியவை உள்ளன.
இந்தச் சூழல் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரே மாதிரியாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இணையப் பாதுகாப்பு, தரவுத் தனியுரிமை அபாயங்கள் ஆகியவை தொடர்பாக நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுப்பதும் அதிகரித்துள்ளது.
“செலவின நிவாரணம், பணப்புழக்கம், ஊழியர் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் என்று வர்த்தகங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது, ஆற்றல் மேம்பாட்டில் முதலீடு செய்யும் அதே வேளையில் மீள்திறனுடன் செயல்பட அவை கொண்டிருக்கும் வேட்கையைப் பிரதிபலிக்கிறது,” என்று திரு கோக் தெரிவித்தார்.

