ஜோகூர் பாரு: ஜோகூரின் இரண்டு சோதனைச் சாவடிகள் வாயிலாக மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்களுக்கு விஇபி (VEP) வாகன நுழைவு அனுமதிக்குரிய பாக்கித் தொகை குறித்தும் காவல்துறையின் அழைப்பாணை (Summon) குறித்தும் தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த விவரங்கள் தகவல் பலகையில் இடம்பெறும் என்று சாலைப் போக்குவரத்து (JPJ) அதிகாரி ஒருவர் கூறினார்.
“அபராதத் தொகையைச் செலுத்துமாறு வெளிநாட்டு வாகனங்களின் ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்க இது ஒரு சிறந்த வழி. கடந்த சில ஆண்டுகளாக பல்லாயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அபராதத் தொகை நிலுவையில் உள்ளது,” என்றார் அவர்.
ஜோகூருக்கான இரு நிலவழி சோதனைச் சாவடிகளிலும் சாலைப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து சோதனை நடத்தி, விஇபி வாகன நுழைவு அனுமதிக்குப் பதிந்துகொள்ளுமாறு நினைவூட்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் இருந்து வந்த 20,000க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சோதனை செய்த பின்னர் நூற்றுக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு நினைவூட்டல் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதுநாள் வரை 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் விஇபிக்குப் பதிவு செய்துள்ளன. மேலும், பதிவு கோரி ஒவ்வொரு நாளும் 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் இருந்து செல்லும் வாகனங்கள் விஇபி இல்லாவிட்டாலும் ஜோகூருக்குள் நுழையலாம். ஆனால், விஇபி பதிவு குறித்து அந்த வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
ஜோகூரில் டங்கா பே, இஸ்கந்தர் புத்ரி, ஸ்கூடாய் ஆகிய இடங்களிலும் சிங்கப்பூரில் உட்லண்ட்சிலும் விஇபி பதிவுக்கான முகப்புகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
விஇபி பதிவை நிர்வகிக்கும் டிசிசென்ஸ் (TCSens) தனியார் நிறுவனம் சிங்கப்பூரில் விஇபி விவகாரங்களைக் கவனிக்க மேலும் ஒரு முகப்பை அமைக்கும் என சிங்கப்பூர் தேசிய வாடகை வாகன உரிமையாளர் சங்கம் எதிர்பார்க்கிறது.
விஇபி விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதுடன் உரிம வில்லையை வாகனத்தில் பொருத்துவதற்கும் தேவையான எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய நிலையம் ஒன்று சிங்கப்பூரில் அமைக்கப்படுவது அவசியம் என்று அந்தச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

